அரிமளம் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

திருமயம்,ஏப்.13: அரிமளம் அருகே போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவில் சிதிலமடைந்த சாலையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆயிங்குடியிலிருந்து உமையாள்புரம் வழியாக கடியாபட்டி, திருமயம் செல்லும் சாலை உள்ளது. இது சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சரி செய்யப்பட்டது. இந்த சாலை வயல் பகுதிக்குள் செல்வதால் மண்ணில் உறுதித்தன்மையின்றி சாலை சரி செய்த ஓரிரு வருடங்களில் பலத்த சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பழுதடைந்த சாலையில் சென்ற கனரக வாகனங்களால் சாலை தாங்காமல் சாலையின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை அப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலையில் உள்ள பள்ளத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆயிங்குடியில் இருந்து செல்வமணி உமையாள்புரம் வரை உள்ள சேதமடைந்து காணப்படும் சுமார் 3 கிலோமீட்டர் சாலையை அப்பகுதி மக்கள் நலன் கருதி உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்