அரவக்குறிச்சி பகுதியில் கார்பைடு கற்கள் மூலம் பழுத்த மாம்பழம் விற்பனை

அரவக்குறிச்சி, ஜூன் 13: அரவக்குறிச்சி பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழ விற்பனையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்பொழுது மாம்பழம் சீசன் என்பதால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் மொத்த வியாபாரிகள் பல இடங்களில் குடோன் அமைத்து மாம்பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு ஆங்காங்கே விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். பொதுமக்களும், மாம்பழ பிரியர்களும் மாம்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சில்லரை விலையில் கிலோ, ரூ.50 முதல் ரூ.100 வரை மாம்பழம் தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகின்றது.

மொத்த மாம்பழ வியாபாரிகள் மாந்தோப்புகளில் இருந்து மாங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். சில வியாபாரிகள் இயற்கையாக பழுத்த பழங்களை விற்பனை செய்கின்றனர். பரவலாக சில மொத்த வியாபாரிகள் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் மாங்காய்களை செயற்கையாக பழுக்க வைக்க கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர். கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் வயிற்று உபாதை மற்றும் வயிற்று போக்கு ஏற்படும். இவைகளை நீண்ட நாள் உபயோகித்தால் கேன்சர் நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு, ஈரல், கணையம் கெடுதல் ஏற்படும் அவலம் நிலவுகிறது. ஆகையால் மாம்பழம் வாங்கி உபயோகிப்பதில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழ விற்பனையை சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்