அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பயனற்று கிடக்கும் மாணவர்கள் விடுதி..!

காளையார்கோவில்: காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாழடைந்து பயனற்று கிடக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ தங்கும் விடுதியில் பல்வேறு தீய செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ளது. 1998ம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது. இவ்விடுதியில் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாக கட்டிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்து வந்தது. 2013 வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தங்கி படித்து வந்தார்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வந்தது. இதனால் விடுதி மற்றும் பயிற்சி பள்ளியை கவனிக்காமல் பூட்டிய நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் எந்தப் பயன்பாடும் இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் மராமத்து பணிகள் எதுவும் செய்யாமல் விட்டதால் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு மைதானம் அப்பகுதியில் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மிகவும் மோசமான நிலையில் உள்ள இக்கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் பல்வேறு தீய செயல்களுக்கு இக்கட்டிடம் பயன்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதேபோன்று அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி பயன்‘படாத பல கட்டிடங்களை கட்டி அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினார்கள். சமூக ஆர்வலர் தெய்வீகசேவியர் கூறுகையில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் விடுதி பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உள்அரங்கம், நூலகம், மதிய உணவு அருந்தும் இடம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுகாதார கழிப்பிடம், போன்ற மாணவ, மாணவிகளுக்கு பயன்படக்கூடிய கட்டடங்களைக் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்….

Related posts

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூட்டு தல விவகாரம் : சென்னை பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல்