அரசு பேருந்து ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி பெண் பலி ஆட்டோ டிரைவர் உட்பட 9 பேர் படுகாயம் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது

பள்ளிகொண்டா, நவ.26: பள்ளிகொண்டா அருகே துக்க நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் சென்றபோது சாலை வளைவில் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று மதியம் 12.15 மணிக்கு ஒடுகத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பள்ளிகொண்டா வழியாக நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திப்பசமுத்திரம் அடுத்த ஈடியர்பாளையம் குறுகிய சாலை வளைவில் அரசு பேருந்து வந்தபோது பள்ளிகொண்டாவில் இருந்து ஒடுக்கத்தூர் நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், ஆட்டோ சாலையோரம் உள்ள நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 10 பேர் படுகாயமடைந்து கை, கால்கள் ஆட்டோவில் சிக்கி கொண்டு அலறி துடித்தனர். உடனே பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் பள்ளிகொண்டா ஜமேதார்தோப்பு தெருவை சேர்ந்த வேண்டா(53), அய்யாவு நகரை சேர்ந்த சாந்தி(48), முருகம்மாள்(60), ராதா(39), தேவராஜ்(64), சரளா(42), வள்ளி(53) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் 7 பேரும் பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் பகுதியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பள்ளிகொண்டா அம்பேத்நகர் பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் வாடகைக்கு பேசி சென்றுள்ளனர். அப்போது, இளையராஜா அவரது தம்பி இளவரசனுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 7 பேரை அழைத்து கொண்டு சென்ற போது, பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் மற்றொரு பயணியை ஏற்றியதையடுத்து மொத்தம் ஆட்டோவில் 10 பேர் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, ஈடியர்பாளையம் குறுகிய சாலை வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒடுகத்தூரிலிருந்து பள்ளிகொண்டா நோக்கி வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த வேண்டா(53) மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர் இளையராஜா மற்றும் அவரது தம்பி இளவரசனுக்கு கை, கால் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த எஸ்ஐ நாராணன் அரசு பேருந்து டிரைவரிடம் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்