அரசு பஸ் கண்ணாடி உடைத்த போதை வாலிபருக்கு தர்மஅடி தப்பியோடிய மற்றொருவருக்கு வலை ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, அக்.21: ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் இருந்து நேற்று, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி புறப்பட்டது. தொடர்ந்து, அரையாளம் கிராமம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் திடீரென காய்ந்த பனங்கொட்டையை பஸ் மீது வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ராமதாஸ் உடனே பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த நபர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட்டார். ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், பஸ்ஸில் கட்டி வைத்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் ெதாழிலாளி செல்வம் மகன் தினேஷ்(24), தப்பியோடியவர் தச்சூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த அஜித்(25) என்பது தெரியவந்தது. மேலும், நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று வேலைக்கு வந்தபோது மதுபோதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் ராமதாஸ் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய அஜித்தை வலைவீசி தேடிவருகின்றனர். அரசு பஸ் கண்ணாடி மீது கல் வீசி உடைக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்