அரசு பள்ளி மாணவர்களுக்கான காலியாக உள்ள 3 பிடிஎஸ் இடங்களை 2ம் கட்ட கலந்தாய்வில் நிரப்ப முடிவு: அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான 3 பிடிஎஸ் இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 73 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர். இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டுக்கான இரண்டு நாள் கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் கலந்தாய்வில் 739 பேர்  பங்கேற்றனர். இதில் 541 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர். மேலும் 198 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் முதல் நாள் கலந்தாய்வு முடிவில் மூன்று பிடிஎஸ் இடங்கள் மட்டுமே காலியாக இருந்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 2ம் நாள் கலந்தாய்வு நேற்று நடைபெறவில்லை. இதனால் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என தரவரிசைப் பட்டியல் வெளியிடும் போது கூறினார். அதன்படி நேற்று இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறவில்லை. முதல் நாள் கலந்தாய்வில் இடங்கள் நிரம்பிவிட்டதால் இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறவில்லை என்று தெரிவிக்கின்றனர். இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறாது என முறைப்படி அறிவித்திருந்தால் நாங்கள் வெளியூரில் இருந்து வந்திருக்க மாட்டோம் என்றனர். மேலும் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணியிடம் கூறுகையில்: அரசு பள்ளி மாணவர்களுக்கான மொத்தமுள்ள 544 இடங்களில் 541 இடங்கள் முதல் நாளான நேற்று முன்தினமே நிரம்பிவிட்டது. மூன்று பிடிஎஸ் இடங்களை மட்டும் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒருநாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே அழைப்புக் கடிதமும் கொடுக்கப்பட்டது. இரண்டாம் நாள் கலந்தாய்வுக்கான விவரங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை, அழைப்புக் கடிதமும் கொடுக்கவில்லை. மேலும் காலியாகவுள்ள மூன்று பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப கிடைக்கும் இடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இது குறித்து இணையதளத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு