அரசு பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 10 மாணவர்கள் காயம் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஜூன் 19: ஆரணி அருகே அரசு பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 மாணவர்கள் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சிறுமூர், அருந்ததிப்பாளையம், கிழக்கு மற்றும் வடக்கு கொட்டாமேடு, செட்டித்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 99க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் நீண்ட தூரம் பள்ளிக்கு சென்றுவர வேண்டி உள்ளதால், பள்ளி சார்பில் வாடகைக்கு மினிவேன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தினமும் கிராமங்களில் இருந்து இந்த வேன் மூலம் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவது வழக்கம். அதேபோல், நேற்று காலை 8.45 மணியளவில் அந்த மினிவேன் அருந்ததிப்பாளையம் கிராமத்தில் இருந்து கிழக்கு கொட்டாமேடு கிராமம் வழியாக இருந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிறுமூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது, கிழக்கு கொட்டாமேடு அருகில் உள்ள குறுகலான பாதையில் வரும்போது, அங்குள்ள சாலைவளைவில் வேன் திரும்பியுள்ளது. அப்போது, நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேற்றில் திடீரென மினிவேன் சிக்கிகொண்டு, அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது. மேலும், வேனில் இருந்த மாணவர்கள் சிக்கிக்கொண்டு அலறி அடித்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனே, அருகில் இருந்த விவசாயிகள், பொதுமக்கள் போராடி மாணவர்களை மீட்டனர். மேலும், 10 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டு அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு