அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்: மீண்டும் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தால் காவனூர் புதுச்சேரி, அத்தியூர், மேனல்லூர் என சுற்றியுள்ள கிராம விவாயிகள் பயன் பெற்றனர்.காவனூர் புதுச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம், கடந்த சில மாதங்களுக்கு முன், மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களது நெல் விற்பனை செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து விவசாயிகள், மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அங்கு மீண்டும் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், சுமார் 15 நாட்கள் மட்டுமே செயல்பட்டு, பின்னர் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பி அங்கு நெற்களை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் வருவார்கள் என நம்பி இதுவரை, அங்கேயே நெல் குவியலுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கொள்முதல் செய்வதற்காக குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து முளைந்து வீணாகி வருகிறது. இதேநிலை நீடித்தால் விவசாயிகளின் ஒட்டு மொத்த நெல்லும் வீணாகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காவனூர் புதுச்சேரி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து