அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்

தூத்துக்குடி, ஜூன் 4: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டுமென கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி உள்ளக புகார் குழு அமைத்திட வேண்டுமென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, சிறு, குறு நிறுவனங்கள், அமைப்புசாரா பணியிடங்களில் மற்றும் பெரிய, சிறிய அளவிலான மளிகைக் கடைகள் முதலான அனைத்துப் பணியிடங்களில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் (ஒரு பெண் பணியாளர் இருந்தாலும்) பணிபுரியும்பட்சத்தில் அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைத்து அதன் விவரத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலும், சட்ட விதிமுறைகளை மீறினாலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்