அரசுப்பள்ளிகளில் 3,041 மாணவர்கள் சேர்க்கை

சேலம், ேம 13: சேலம் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு தொடங்கும் முன்பே, அரசுப்பள்ளிகளில் 3,041 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை மேலும் தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சேர்ந்த மாணவர்களை இடைநிற்றல் இன்றி ெதாடர்ந்து தக்க வைக்கவும், மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், கிராமப்புறங்களில் உள்ள ஓரிரு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்ைல. இதனையடுத்து நடப்பாண்டு இத்தகைய பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் முன் எப்போதும் இல்லாத வகையில், கல்வியாண்டு ெதாடங்கும் முன்பே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டது. சேலம் மாவட்டத்தை ெபாறுத்தவரை, தொடக்கக்கல்வி துறையின் கீழ் சேலம் கல்வி மாவட்டம் மற்றும் தாரமங்கலம் கல்வி மாவட்டம் என கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இங்கு 1,500க்கும் மேற்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் சேலம் சந்தோஷ், தாரமங்கலம் மாதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், 3 பிரத்யேக வாகனங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3,041 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவம் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அதன்பின்னரே அரசுப்பள்ளிகளில் அந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கமாக இருந்து வந்தது. அதேசமயம், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மே மாதம் முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், நடப்பாண்டு ஏப்ரல் இறுதியிலேயே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. முன்னதாக, பொதுமக்களுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதன் பலனாக, சேலம் மாவட்டத்தில் கல்வியாண்டு தொடங்கும் முன்பே நடப்பாண்டு 3,041 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், முதல் வகுப்பில் மட்டும் 2,830 பேர் சேர்ந்துள்ளனர். 2 முதல் 8ம் வகுப்பு வரை 211 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும், எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மற்றும் இல்லம் தேடிக் கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசுப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ₹1,000 என்பது உள்ளிட்ட முன்னுரிமை குறித்த விவரங்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை