அரசியல் சுற்றுப்பயணத்தில் சிக்கனமாக இருக்கும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனி, சேலம் விவிஐபிக்களின் சந்தேக வட்டத்தில் சிக்கி திணறும் இலை கட்சியின் மாஜி இலை அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி ேசாழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் தற்போது ேசலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். ஆனால், அவர் மீது ேசலத்துக்காரருக்கு பெரிய அளவில் நம்பிக்கை கிடையாதாம். மாஜி அமைச்சரின் நடவடிக்கையை கண்காணிக்க, அவருக்கே தெரியாமல் ரகசிய டீம் ஒன்றை சேலத்துக்காரர் நியமித்தாராம். அதில், மாஜி அமைச்சர் வீட்டுக்கு தினமும் யாரெல்லாம் வந்து அவரை சந்தித்து செல்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். இந்த விவகாரம் எப்படியோ வெளியில் கசிந்ததாம். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாஜி அமைச்சர், தன் மீது விழுந்துள்ள சந்தேக பார்வையை போக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாராம். வேற வழியின்றி சில தினங்களுக்கு முன் தேனிக்காரரை, மாஜி அமைச்சர் பெயரளவுக்கு வசைபாடினாராம்… ஆனால், சேலத்துக்காரர் டீம் இதை நம்பவில்லையாம். தேனிகாரரும் இவர் சேலம்காரரின் ஸ்பை என்ற நினைப்பில் பேச மறுக்கிறாராம். இதனால் எந்த அணிக்கு செல்வது என்று தெரியாமல் மாஜி அமைச்சர் திணறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்ன மம்மி பங்கேற்கும் கூட்டங்கள் எல்லாம் சாதாரணமாக இருக்காமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சிக்காரங்க ஒரு காலத்தில் தூக்கி வைத்து கொண்டாடிய சின்ன மம்மியை, சேலத்துக்காரரு டைம் பார்த்து கட்சியில் இருந்ேத தூக்கிட்டாரு. இப்போது சின்ன மம்மியின் கடைசி ஆயுதமாக நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்குதான் நம்பிக்கையாக இருக்காம். நடுவுல அரசியலே வேண்டாம் என்ற சின்ன மம்மி, அப்புறம் ஆன்மீக சுற்றுப்பயணம் ஆரம்பிச்சாங்க. அப்புறம் சேலத்துக்கும், தேனிக்கும் கிலி காட்டும் வகையில் அரசியல் சுற்றுப்பயணத்தை அறிவிச்சாங்க. அதற்குள் சின்ன மம்மி பக்கம் ராசியாக போயிட்டாரு தேனிக்காரரு. இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் எப்போதாவது ஒருமுறை சின்ன மம்மிக்கு ஆதரவாக பேசுகிறாராம். ஆனால், சின்ன மம்மியோ, இரண்டு விவிஐபிக்களையும் கண்டு கொள்ளாமல், தனது வழக்கமான அறிக்கை, பயணத்தை தொடர்ந்து நடத்துவதில் முனைப்போடு இருக்காங்க. ஆனால், முன்பு மாதிரி பிரமாண்ட மேடை, ஆளுயர மாலை, கிலோ மீட்டர் தூரம் வரவேற்பு எல்லாம் காணவில்லையாம். காரணம், இவற்றுக்கு தேவையான கரன்சி சின்ன மம்மி சைடில் இருந்து சப்ளை இல்லையாம். ஆனால் சின்ன மம்மி பழைய நினைப்பில் ப-வைட்டமினை கண்ணுலயே காட்டமாட்டேங்கிறாங்க. மாங்கனி மாவட்ட சுற்றுப்பயணத்தில் கூட, சேலத்துக்காரரை வெறுப்பேத்தறதுக்காக வீம்புக்கு ஒருத்தரு செலவு செஞ்சாரு. இப்போ அவரும் விட்டதை எப்படி பிடிக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்காரு. தேர்தலுக்கு முன்னாடியும், தீர்ப்புக்கு முன்னாடியும் இருக்கிற காசை கரைக்க வேண்டாம். தேர்தல் நெருங்கும்போது பார்த்து கொள்ளலாம் என்று சின்ன மம்மி நினைக்கிறாராம். அவர் வருவார் பெரிதாக தருவார் என்று நினைத்தவர்களுக்கு சின்ன மம்மியின் சிக்கனம் கசப்பாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒன்னு இரண்டாச்சு… இப்போது நாலாக போய்… இலை கட்சியே காணாமல் போகும் போல…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் உட்கட்சி மோதல் பூதாகாரமாகி, சேலத்துக்காரர், தேனிக்காரர் ஆதரவாளர்கள் என உடைந்து கிடக்கின்றனர். ‘பூட்டு மாவட்டத்தில்’ ஏற்கனவே இலைக்கட்சியில் முன்னாள் மந்திரியான இருவர் பொறுப்பாளர்களாக இருக்கும் நிலையில், தேனிக்காரர் தன் ஆதரவை வலுப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக இந்த ‘பூட்டு’ ஊருக்கு நேரில் வந்து, கட்சி நிர்வாகிகள் வீட்டில் அமர்ந்து ஆலோசித்தார். எப்படியும் சேலத்துக்காரரின் ஆதரவாளர்களை வளைத்துப்பிடியுங்கள் என்று உத்தரவிட்டவர், இதற்கான முதல் அச்சாரமாக மாவட்டத்திற்கென மூன்று மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருக்கிறார். தொடர்ந்து அத்தனை மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கான பட்டியலையும் தேனிக்காரர் தயாரித்து வருகிறாராம். கம்முன்னு ஓஞ்சு உக்காராமல் பதவி கொடுத்து இப்படி ஆட்களைச் சேர்த்து, கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்திட்டு வர்ராரேன்னு சேலத்துக்காரரின் ஆதரவாளர்களிடம் புலம்பல் அதிகரித்து வரும் நிலையில், என்ன செஞ்சு என்ன பண்ண? இலைக்கட்சி ரெண்டாவா பிரிஞ்சு கிடக்கு, நாலஞ்சா போச்சுங்களே? என்றும் தொண்டர்களிடம் புலம்பல் ஒலித்து வருகிறது… என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாவட்டத்துக்கு வந்த தேனிக்காரர் ஏன் சோகமாக போனாரு…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் எப்படி இருந்த தலைவர் இப்படி ஆயிட்டாரே என அவர் ஆதரவு நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனராம். அதாவது கட்சியில் எடப்பாடியின் கை ஓங்கிய பிறகு முதல் முறையாக சொந்த நிகழ்ச்சிக்காக அல்வா மாவட்டத்திற்கு வந்திருந்தார் தேனிக்காரர். கடந்த 20 ஆண்டு கால அரசியலில் தேனி மொய்த்தது போல் தன்னைச் சுற்றி கூட்டம் இருந்த நிலையில் அல்வா மாவட்டத்திற்கு வந்திருந்த தேனிக்காரருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாம். கட்சியில் எடப்பாடி கை ஓங்கி தேனிக்காரரை ஓரம் கட்டி விட்ட நிலையில் தேனிக்காரரும், அவரது வாரிசும், விரல் விட்டு எண்ணும் அவரது அணி நிர்வாகிகளும் தான் உடனிருந்தனராம். முன்பெல்லாம் தேனிக்காரர் அல்வா மாவட்டத்திற்கு வருகிறார் என்றார் இலை கட்சியினர் நிர்வாகிகள், கார்கள் என புடை சூழ்ந்து வருவார்களாம். ஆனால் இப்போது எந்தப் படையும், பரிவாரமும் இல்லாமல் அமைதியாக வந்து சென்றாராம். இலை கட்சி நிர்வாகிகள் அவரது திசை பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லையாம். இதனால் அவருடன் வந்த ஒரு சில நிர்வாகிகளும் எப்படி இருந்த தலைவர் நிலைமை இப்படி ஆகிருச்சே என ஆதங்கப்பட்டனராம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா