அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் மீது வழக்கு: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பட்ஜெட் தாக்கலின் போது வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநிலத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர், 14வது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு என்றும், ரூ.25 ஆயிரம் கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். 14வது நிதிக்குழு குறிப்பிட்ட வரி, ஒரு உத்தேச மதிப்பீடுதான். ஆனால் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. அதேபோல் செலவு பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நல திட்ட உதவிகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளின் அடிப்படையிலானது. திமுக அரசு தற்போது வழங்கிய கொரோனா நிதியில், அவர்கள் விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாமே. எனவே ஊதாரித்தனமாக செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிதி அமைச்சர் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது.  அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். பொய் வழக்குகளை சட்டப்படி  எதிர்கொள்வோம். இவ்வாறு கூறினார். …

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்