அரசின் குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு வரும் 8ம் தேதி முதல் துவங்கபடவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2, 2ஏ தேர்வு மூலம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 19ம் தேதி ஆகும். இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதள முகவரி www.tnpsc.gov.in என்பதாகும். மேலும் இதற்கான எழுத்துதேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 14ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8ந் தேதி முதல் துவங்கவுள்ளது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை