அம்மா உணவகத்திற்கு வாங்கிய சப்பாத்தி மாவு பிசையும் இயந்திரம் திருட்டு: ஓட்டேரி போலீசார் விசாரணை

பெரம்பூர், ஆக. 10: ஓட்டேரி அம்மா உணவகத்தில் ₹10 லட்சம் மதிப்புள்ள சப்பாத்தி மாவு பிசையும் இயந்திரம் திருடு போனது. இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி பட்டாளம் நியூ பேரன்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான துணை மின் நிலைய கட்டிடத்தில் அம்மா உணவகத்திற்கு சப்பாத்தி மாவு பிசையும் இயந்திரம் கடந்த 2013ம் ஆண்டு வாங்கி, ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த இயந்திரத்தை முறையாக யாரும் பயன்படுத்தவில்லை. தற்போது சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கடந்த 4ம் தேதி அன்று கள ஆய்வு செய்தபோது மேற்படி கட்டிடத்தில் சுவர் இடிக்கப்பட்டு சப்பாத்தி மாவு தயாரிக்கும் இயந்திரம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் உதவி பொறியாளர் ஜெரால்டு புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2013ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த இயந்திரத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும், பயன்படுத்தாத இயந்திரத்தை அப்புறப்படுத்தவும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ₹10 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் காணாமல் போய் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்