அம்பத்தூர் அருகே திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

 

அம்பத்தூர், ஜன.5: அம்பத்தூர் அடுத்த கருக்கு மேனாம்பேடு பிரதான சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, 7வது மண்டலம், 82வது வார்டுக்கு உட்பட்ட கருக்கு மேனாம்பேடு பிரதான சாலை, நான்கு முனை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு, சுமார் 21 அடி ஆழம், 10 அடி அகலத்தில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அம்பத்தூர் போலீசார் சாலையில் பள்ளம் ஏற்பட்டதை கண்டறிந்தனர். பின்னர், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி மற்றும் 7வது மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், இந்த ராட்த பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அம்பத்தூர் ஐந்து ஆலமரம் மற்றும் புதூர் மார்க்கெட்டில் இருந்து கொரட்டூர் செல்லக்கூடிய மேனாம்பேடு பிரதான சாலை முழுவதுமாக மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வர வேண்டும்: அனைத்து கட்சியினர் மனு

சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம்

பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை