அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

காரிமங்கலம், செப்.27: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், பிரசவ வார்டை பார்வையிட்டார். அப்போது, கர்ப்பிணி பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், உணவு ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியை திறக்க உத்தரவிட்டார்.
புகார் பெட்டியில் மருத்துவமனையில் கழிவறை வசதி, குடிநீர் வசதி கோரி மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதற்குண்டான நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனை கட்டிடத்தில் வளர்ந்து காணப்படும் செடி -கொடிகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை