அமைச்சரவை விரிவாக்கத்தை தாமதம் செய்யும் புல்லட்சாமியின் தந்திரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘ஆவினில் உருளப்போவது அதிகாரிகள் தலையா… கரைவேட்டிகள்  தலையா என்று  கீழ்நிலை ஊழியர்கள் பரபரப்பாக பேசி வர்றாங்களாமே… அப்டியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கரன்சிக்காக குமரி ஆவினில் கூடுதலாக பணியாளர்களை   நியமனம் செய்து இருக்காங்க. இதனால அம்மாவட்ட ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது, இலை கட்சிஆட்சி நிறைவு தருவாயில்  இந்த நியமனங்கள் நடந்துள்ளதாகவும், இதில் முறைகேடு நடந்திருக்க  வாய்ப்பு உள்ளது  என்ற அடிப்படையில் பால்வள நிர்வாக இயக்குநர் அரசுக்கு  கடிதம் எழுதி உள்ளாராம். இதனை போன்று தேர்தலுக்கு முன்னதாக தீவனங்கள்  விலையையும்  குமரி ஆவினில் உயர்த்தினாங்களாம்.  இதுதொடர்பாக துறை  ரீதியாக  விசாரணை நடைபெற்று வந்த நிலையில் துறையின் அமைச்சர் வருகைக்கு பிறகு மோசடி, நியமனங்கள் செய்ததின் மூலம் பொருளாதார இழப்பு குறித்த விசாரணை மேலும் தீவிரமாகி உள்ளதாம்.   இதில் அதிகாரிகளின் தலை உருளப்போகிறதோ,  கரைவேட்டிகளின் தலை உருளப்போகிறதோ  என்ற பேச்சுதான் கீழ்நிலை ஊழியர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுச்சேரியில இப்போது என்ன புதுக்குழப்பம் ஓடிக்கிட்டு இருக்கு என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் புல்லட்சாமி கட்சி பதவியேற்று பல நாட்கள் ஓடியாச்சு.. ஆனால், அமைச்சரவை உறுதி செய்வதில் பெரும் பிரச்னை ஏற்பட்டு இருக்காம். பதவி ஏற்புக்கு முன்னதாக பேசியபடி  அமைச்சர்களை சரி பாதியாக பிரித்துக்கொள்வதாக புல்லட்சாமி முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டதாம். இதனால்  குஷியான தாமரை தரப்பு, புல்லட்சாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்ததாம். ஆனால்  பதவியேற்புக்கு பின்னர் இரண்டு அமைச்சர்கள்தான் தருவேன் என திடீர் முடிவு  எடுத்தாராம். இப்போது மூன்றாவதாக ஒரு அமைச்சர் பதவியை தர முடியாது. வேண்டுமானால் அமைச்சரவை எண்ணிக்கையை உயர்த்தி உள் துறையை உருவாக்குங்கள். அதை வேண்டுமானால் உங்களுக்கு தருகிறேன் என்று மவுனமொழியில் சொன்னாராம் புல்லட்சாமி.   இப்போதைக்கு நடக்காத கதையை பேசுகிறார் புல்லட்சாமி என்று கடுப்பான தாமரை தரப்பு.. மூன்று நியமன எம்எல்ஏக்களை நியமித்து அதிர்ச்சி  வைத்தியம் கொடுத்ததாம்.  இதில் பெரும் கோபத்துக்கு ஆளான புல்லட்சாமி,  அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் ஆட்டம் காட்டி வருகிறார். இன்னும்  சில மாதங்களில் ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்வதற்கான தேர்தலும்  நடைபெறவுள்ளது. நியமன எம்எல்ஏவை போல தாமரை தரப்பு இதிலும் அல்வா கொடுத்துவிடும் என  சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏனத்துக்காரர், புல்லட்சாமியை வைத்து  அரசியல் செய்கிறாராம். இந்த விவகாரத்தை வைத்து ஏனத்துக்காரர் ஒரு பக்கம், புல்லட்சாமி கட்சி நிர்வாகி ஜெயமானவர் ஒருபக்கம் என குழப்பி அதில் மீன்பிடித்து வர்றாங்களாம்.. இந்த எல்லா குழப்பமும் எம்பி பதவிக்குதானாம்.  தேர்தலில் ஏனத்துக்காரர் தோற்றாலும், தன்னை சுற்றி புதுச்சேரி அரசியல்  சுழலை வைத்திருக்கிறாராம். புல்லட்சாமி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய  விடாமல் இருப்பதற்கு காரணமே ஏனத்துக்காரர்தானாம். ராஜ்ய சபா சீட்டை கன்பார்ம்  பண்ண பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யலாம், அதுவரை அமைதியாக இருக்குமாறு சொன்னதால.. விரிவாக்கம் தள்ளிப்போய் கொண்டே இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேலையே இல்லாமல் டீனுக்கான சம்பளம் மட்டும் வாங்கும் அதிகாரி எந்த மாவட்டத்துல இருக்காரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தின் மையப்பகுதியான சின்ன  மாவட்டத்தில் பத்து வருஷத்துக்கு முன்னாடி திமுக ஆட்சியில் மெடிக்கல்  காலேஜ் அறிவிக்கப்பட்டு மெடிக்கல் காலேஜிக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.  மெடிக்கல் காலேஜிக்கு டீனும் நியமிக்கப்பட்டார். ஆனால்… ஆட்சி  மாற்றத்தால் இலை ஆட்சியில் 10 வருடமாக மெடிக்கல் காலேஜ் கட்டுவதற்கான  எந்தவித முயற்சியும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால்…  மெடிக்கல் காலேஜிக்கு நியமிக்கப்பட்ட டீன் போஸ்டிங் மட்டும் இலை ஆட்சியில்  நீக்கப்படாமல் 10 வருடமாக தொடர்ந்ததாம்…கடந்த இலை ஆட்சியில் சுந்தரமானவர்  புதிய டீனாக நியமிக்கப்பட்டாராம்… ஆனால்… அரசு மருத்துவமனையிலோ அல்லது  சுகாதாரத்துறையிலோ உத்தரவு போடுற அளவுக்கு இந்த டீனுக்கு எந்த வேலையும்  இல்லையாம்… வேலையே இல்லாத டீனுக்கு இலை ஆட்சியில் மாதம் மாதம் சம்பளம்  மட்டும் கரெக்டா வந்ததாம்… தற்போது ஆட்சி மாறியிருப்பதால் கொரோனா தடுப்பு  பணிக்கென சிறப்பு அதிகாரியாக இந்த டீனை நியமித்து வேலை கொடுக்க வேண்டும்  என கொரோனா சிறப்பு பணியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மத்தியில் விவாத பொருளாக மாறிவிட்டதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலம் போல… பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்துல விசாரணை நடக்கும்னு பேசிக்கிறாங்களே… அது என்ன…’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.‘‘மாநில குழந்தை  உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில்  மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தை விற்பனை, சிறுமிக்கு நேர்ந்த  பாலியல்  கொடுமை போன்றவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து, செல்வாக்குள்ள  சிலருக்கு  கிடுக்கிப்பிடி போட்டாங்களாம். இந்த விஷயத்துல வெளியாட்களின் தலையீட்டை தடுத்தாங்களாம். அதேபோல, பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தையும் கையாள முடிவு செய்து இருக்காங்களாம். இதற்காக பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 5 பேருக்கு  நோட்டீஸ் அனுப்பியிருக்காங்களாம். ஆணையத்தின் கீழ்ப்பாக்கம் ஆபீசுல வச்சி விசாரணை நடத்தப்போறாங்களாம்.  இதுல தலைவர், உறுப்பினர்கள் மட்டும் தான் விசாரணை செய்வாங்க. அதே நேரத்துல  இந்த விசாரணையில வேறு யாரும் உள்ளே வந்திடக் கூடாதுன்னு விசாரணை அதிகாரிகள்  உஷாரா இருக்காங்களாம். இதனால நியாயமான கேள்வி கேட்கப்படும் எனவும் அவர்கள்  நம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

மலராத கட்சி ஒருங்கிணைப்பாளர் நொந்து போய் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

குறி சொல்லும் சாக்கில் மக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் ஆன்மிக அரசியல்வாதி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஓட்டல் சர்ச்சையால் நன்கொடை பெற முடியாதே என்ற கவலையில் இருக்கும் பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா