அமமுக கூடாரம் காலியாகிறது எடப்பாடி-சசிகலா உச்சக்கட்ட மோதல்: அமைதி காக்கும் ஓபிஎஸ், டிடிவி

சென்னை: சசிகலாவுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமமுக கூடாரத்தை காலி செய்யும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உத்தரவிட்டுள்ளதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் வழக்கத்துக்கு மாறாக டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மவுனம் காத்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். பணிவு காட்டியே பதவியை கைப்பற்றிவிட்டார். அவரை தொடர்ந்து வைத்திருப்பதற்கு பதில் நீங்களே முதல்வராகலாம் என்று சசிலகாவிடம் பன்னீர்செல்வம் பற்றி அதிமுகவினரும், உறவினர்களும் போட்டுக் கொடுக்க, அவருக்கும் முதல்வர் பதவி ஆசை வந்தது. இதனால் பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யும்படி மிரட்டியதோடு தனி அறையில் வைத்து உறவினர்கள் கவனித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பாஜ மேலிடத்தில் தொடர்பு கொண்டு உதவி கேட்க, அவர்களும் நேரடியாகவே உதவி செய்ய ஆரம்பித்தனர். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வம், கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவருடன் 11 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருந்து போர்க்கொடி தூக்கியதால் வெளியேறினர். முதல்வர் கனவில் இருந்த சசிகலா, பதவியை பிடிக்க எம்எல்ஏக்களை கூவத்தூருக்கு தூக்கிச் சென்றார். கூவத்தூரில் முகாமிட்டிருக்கும்போதே திடீர் திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். இதனால் முதல்வர் பதவியை தனக்குப் பதில் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார், சசிகலா. பழனிச்சாமியின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக டிடிவி தினகரனை நியமித்து விட்டுச் சென்றார். அப்போது சூப்ரவைசருக்கும் எடப்பாடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனால் அவர் தன் பங்கிற்கு 18 எம்எல்ஏக்களை இழுத்தார். அவர்களது பதவியும் காலியானது. இதனல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர்.அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவி ஏற்றுக் கொண்டனர். இருவரும் சேர்ந்து சசிகலாவை எதிர்க்கத் தொடங்கினர். ஆட்சி, அதிகாரம் இருந்ததால் போட்டி போட்டு இதை எல்லாம் இழந்து விடக்கூடாது என்று நான்கரை ஆண்டுகளாக இருவரும் அமைதி காத்தனர். தேர்தல் நெருங்க ஆரம்பித்ததும் இருவரும் பலப்பரீட்சைக்கு தயாராகினர். முதல்வர் வேட்பாளருக்கு மோதிக் கொண்டனர். கடைசியில் எடப்பாடியே அதில் வெற்றி பெற்றார். அதேபோல,  வழக்கம்போல விட்டுக் கொடுத்து விட்டு எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை வாங்கிக் கொண்டார். இந்நிலையில், தேர்தலில் ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, இப்போது அதிமுகவை கைப்பற்ற தீவிரமாக திட்டம்போட்டு வருகிறார். இதற்காக அறிக்கை விட்டார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஏன் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட அதிமுகவினர் கூட எதிர்த்து அறிக்கை விட்டனர். இதனால், அமமுக தலைவர்களை தொடர்பு கொண்டு தினமும் பேசும் சசிகலா, அதை வெளியிட்டு கிச்சு கிச்சு மூட்டினார். இதனால் அவர் அமமுகவினருடன்தான் பேசுகிறார். அதிமுகவினருடன் பேசவில்லை என்று எடப்பாடி பதிலடி கொடுத்ததும், அதிமுகவினரிடம் பேச ஆரம்பித்தார். சசிகலாவின் போன் வந்ததும் பல அதிமுக தலைவர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் பழைய ஆட்கள், தென் மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். ஆனால் அதிலும் நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. சசிகலாவுக்காக சில தொழில் அதிபர்கள், ஆதாயம் பெற்ற சில முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சில தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ஆனால் யாரும் அவர்களுக்கு பிடி கொடுக்கவில்லை. ஆனால் அதிமுகவை கைப்பற்றுவேன் என்று அவர் பேச ஆரம்பித்து விட்டதால் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டார். இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்களை அழைத்து அமமுகவினரை தொடர்பு கொண்டு பேசி அதிமுகவுக்கு அழைத்து வாருங்கள் என்று உத்தரவு போட்டார். இதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவின் ஐக்கியமாகிவிட்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் அமமுகவினரை இழுக்கும் வேலைகளை அதிமுக நிர்வாகிகள் செய்யத் தொடங்கிவிட்டனர். அதோடு ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக செல்ல மாட்டார். ஆனால் ஆதரவாகவும் இருக்க மாட்டார். அவர் மீண்டும் சசிகலாவிடம் அடிமையாக இருக்க மட்டார். தலை நிமர்த்தி கேள்வி கேட்கும் நிலை அவருக்கு வந்து விட்டதால், மீண்டும் அடிமையாக, கூனி குறுகி நிற்க மட்டார். அதேநேரத்தில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பலர் நம் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். இதனால் கட்சியில் அவர் ஒரு பெயருக்குத்தான் இருப்பார். சசிகலாவுக்கு ஆதரவு காட்டுவதுபோல, செயல்பட்டால் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக தனது சமூக நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக மாறுவார்கள் என்பதற்காகத்தான் அவர் ஆதரவு போல நடிக்கிறார். இதனால் தைரியமாக அமமுகவினரை இழுத்து வாருங்கள் என்று மாவட்டச் செயலாளருக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதனால் சசிகலாவுக்கும், எடப்பாடிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது. இருவரும் போட்டி போட்டு ஆட்களை இழுக்க ஆரம்பித்துள்ளனர்.இதற்கிடையில் சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் போட்டியில் டிடிவி தினகரனை ஓரம் கட்டி வைத்துள்ளாராம். ஆட்சியையும், கட்சியையும் விட்டுச் சென்றால் அதை காலி செய்து விட்டார். இப்போது அமமுகவையும் காலி செய்கிறார் என்று கோபத்தில் உள்ளாராம். இதனால் டிடிவி தினகரனும் அமைதியாகிவிட்டார். அதேநேரத்தில் எடப்பாடி, சசிகலா மோதல் ஆரம்பித்ததால் ஓ.பன்னீர்செல்வமும் சைலண்டாகிவிட்டாராம். இது அதிமுகவினர் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் எடப்பாடி-சசிகலா மோதல், டிடிவி, ஓபிஎஸ் மவுனம் ஆகியவை அதிமுகவில் புதிய குழப்பத்தையும், பிரச்னைகளையும் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.* திமுகவில் சேரும் அமமுகவினர்எடப்பாடி ஒரு பக்கம் அமமுகவினரை சேர்க்க திட்டம் தீட்டினாலும், இருவரும் மோதி அதிமுகவை அழித்து விடுவார்கள். அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை அனைத்து கட்சியினரையும், மக்களையும் வெகுவாக கவர ஆரம்பித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் புகழ ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அமமுக நிர்வாகிகள், பலர் அதிமுகவில் சேர்ந்தால் எதிர்காலம் இல்லை என்று கருதி திமுகவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். தர்மபுரியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நெல்லை மாவட்ட அமமுக செயலாளர் ஐயப்பன் ஆகியோர் திமுகவில் சேர்ந்து விட்டனர். மேலும் பலர் திமுகவில் சேர மாவட்டச் செயலாளர்களிடம் பேசி வருகின்றனர். ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தும் வருகின்றனர். இதனால் அமமுக கூடாராம் திமுகவில் ஐக்கியமாகி வருவதால் சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிமுகவினரும் திமுகவில் சேர உற்சாகம் காட்டி வருகின்றனர். தற்போது கொரோனா காலம் என்பதால் அவர்கள் அமைதியாகி உள்ளார்களாம். விரைவில் பல அதிமுகவினரும் திமுகவில் சேர்வார்கள் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.* அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல்களில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிமுகவில் சசிகலா மேற்கொண்டு வரும் தொடர் குழப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்களுடனும் கட்சி தலைமை இது குறித்து ஆலோசிக்க உள்ளது. மேலும் வரும் 9ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது….

Related posts

சொல்லிட்டாங்க…

முதுநிலை நீட் தேர்வுக்கான தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம்: அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

நம் கொள்கை ஆயுதமாக திகழும் முரசொலியை வாழ்த்துவோம் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்