Monday, July 8, 2024
Home » அப்பர் பெருமான் சுட்டும் கீழ்க்கணக்கு

அப்பர் பெருமான் சுட்டும் கீழ்க்கணக்கு

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் திருக்கோளிலி எனும் தேவாரத் தலத்திற்கு அருகமைந்த ஊரான குண்டையூர் எனும் ஊரில் திகழ்ந்த குண்டையூர் கிழாருக்குச் சிவபெருமான் நெல்மலையை அருளி சுந்தரரிடம் அளிக்கப் பணித்தான். திருக்கோளிலி சென்ற நம்பியாரூரராகிய சுந்தரர் குண்டையூரில் கொடுத்த நெல்மலையைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல இயலாமையால் கோளிலிப் பெருமான் முன்பு நின்று பதிகம்பாடி ஆரூருக்கு அந்நெல்லைக் கொண்டுசெல்ல அருள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்பதிகத்தின் முதல் பாடலில்,நீள நினைந்து அடியேன் உன்னை நித்தலும் கைதொழுவேன்வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமேகோளிலி எம்பெருமான் குண்டையூர் சிலநெல்லுப் பெற்றேன்ஆள்இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே- எனக் குறிப்பிட்டதோடு மேலும் நான்கு பாடல்களில், “குண்டையூர் சிலநெல்லுப் பெற்றேன்” என்றே கூறியுள்ளார்.நம்பியாரூரருக்காகக் குண்டையூர்பெருமான் கொடுத்ததோ எடுக்க இயலாத அளவு உள்ள நெல் மலையாகும். ஆனால், சுந்தரர் குறிப்பிடுவதோ சில நெல்லு பெற்றேன் என்பதாகும். உரிமையோடு அளப்பதற்கு இயலாத அளவுடைய நெல்லை சில நெல்லு பெற்றேன் என எதிர்ச்சொல் கொண்டு உரைத்தது சுவை பயப்பதாகும்.சில என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி கொஞ்சம் என்று பொருள் உரைக்கின்றது. பல என்ற சொல்லுக்கு அதே அகராதி ஒன்றுக்கு மேற்பட்டவை என்று கூறுகின்றது. அதேபோன்று பலர் என்ற சொல்லுக்கு அநேகர், சபை என்றும், சிலர் என்ற சொல்லுக்குச் சிலபேர் என்றும் உரைக்கின்றது. அங்குகூடச் சில என்பதைக் கொஞ்சம் அல்லது குறைவு என்றே நாம் கொள்ள வேண்டியுள்ளது. சில என்பதை எண்ணிக்கையால் நாம் இத்தனைதான் என்று உரைக்க முடியாது. ஆனால், பல என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை எண்ணிக்கை ஆனாலும் அது அச்சொல்லாலேயே உணர்த்தப் பெறுவதாகும். சுந்தரர் தம் பதிகத்தில் பெருமானாரிடம் கொண்ட உரிமையால் மலையளவு நெல்லை நேர் எதிரிடையாகச் சில நெல்லு (கொஞ்சம் நெல்) பெற்றேன் என்று கூறியுள்ளார். சில, பல என்ற இரு சொற்களின் பொருளுணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழின் சிறப்பாகும்.சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கோளிலியில் சில என்ற ஒரு கணக்கைக் கூறினாற்போல, திருநாவுக்கரசர் திரு இன்னம்பர் எனும் தலத்தில் பாடிய “என்னிலாரும்”  –  எனத் தொடங்கும் பதிகத்தில் எட்டாம் பாடலாக,தொழுது தூமலர் தூவித் துதித்து நின்றுஅழுது காமுற்று அரற்றுகின்றாரையும்பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும்எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே– என்று பாடி இன்னம்பர் ஈசனைப் போற்றிப் பரவியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானார் திரு ஆலங்காட்டுப் பதிகம் பாடும்போது,போழல்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்கேழல் வினை போகக் கேட்பிப்பாரும் கேடுஇலாஆழ்வார் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே– என மக்களின் செயல்கள் பற்றி எடுத்துரைத்து ஆலங்காட்டுப் பெருமானின் சிறப்பினைப் போற்றியுள்ளார்.இங்கு நாம் முதலில் கண்ட அப்பர் பெருமானின் பதிகப் பாடலில் தூமலரால் துதித்து நின்று போற்றுவார் திறமும் பொழுதுபோக்கி புறக்கணிப்பார் செயலையும் கீழ்க்கணக்கு அடிப்படையில் துல்லியமாக இன்னம்பர் ஈசன் குறித்து வைத்திருப்பான் என்று கூறியுள்ளார்.தமிழ்மொழிக்கு உரிய பெரும் சிறப்பு கீழ்க்கணக்கு என்பதாகும். இதனை, பின்னம் என வடமொழியாளர் குறிப்பர். பொதுவாக நாம் முக்கால், அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற கீழ்க்கணக்குக் (பின்னக்) குறிப்புகளை மட்டுமே அறிந்துள்ளோம். பொதுவாகப் பேச்சு வழக்கில் இம்மி அளவுகூடக் கொடுக்கமாட்டேன் எனப் பேசுவோம். ஆனால், அது எவ்வளவு என்பதை நாம் அறியோம். தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் கணிதவியலில் கீழ்க்கணக்கு என்ற அற்புத அறிவியல் கணக்கீடுகளைத் துல்லியமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கென இராஜராஜசோழன் கொடுத்த ஊர்களைப் பற்றிக் கூறும்போது கல்வெட்டுகளில் ஒரு சாசனம் பின்வருமாறு பட்டியலிட்டுக் கூறுகின்றது.தென்கடுவாயான அருமொழி தேவ வளநாட்டுப் பாலையூரில் பள்ளியுங் கணிமுற்றூட்டும் உட்பட அளந்தபடி நிலம் நூற்று முப்பத்து நான் கேய் வேலி எட்டு மாவின் கீழ் முக்காலே மும்மா வரை யரைக்காணி முந்திரரைக்கீழ் நான்குமாவிலும், ஊர் நத்தமும், சேரிகளும் சுடுகாடும் இவ்வூர் நிலத்தை ஊடறுத்துப் போன வாய்க்கால்களும் இறையிலி நிலம் ஒன்பதே காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரை நீக்கி, இறை கட்டின நிலம் நூற்று இருபத்து ஐஞ்சேய் ஏழு வேலி மாவரை முந்திரிகைக்கீழ் எண் மாவரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல்லு பன்னீராயிரத்து ஐஞ்ஞூற்று முப்பதின் கலனே இருதூணிக்குறுணி ஒரு நாழி” – என்பதே அச்சாசனத்தின் கல்வெட்டு வாசகமாகும்.இதில் உள்ள கீழ்க்கணக்குகளை நாம் படிக்கும்போது புரியாதவைகளாகவே இருக்கும். நம் முன்னவர்கள் பயன்படுத்திய கீழ்க்கணக்கு முறை சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை பள்ளி மாணவர்களின் வாய்ப்பாட்டில் இருந்துள்ளது. ஈழத்துத் தமிழர்களின் பள்ளிப் பாடத்திட்டத்தில் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளது. அந்த கீழ்க் கணக்கு என்பது என்னதான் என்பதை இனிக் காண்போம்.முக்கால் 3/4, அரை 1/2, கால் 1/4, நாலுமா 1/5, மும்மாமுக்காணி 3/16, மும்மா 3/20, அரைக்கால் 1/8, இருமா 1/10, மாகாணி அல்லது வீசம் 1/16, ஒருமா 1/20, முக்காணி 3/80, அரைமா 1/40, காணி 1/80, அரைக்காணி 1/160, முந்திரி 1/320, கீழ்முக்கால் 3/1280, கீழரை 1/640, கீழ்க்கால் 1/1280, கீழ்நாலுமா 1/1600, கீழ்மூன்று வீசம் 3/5020, கீழ்மும்மா 3/6400, கீழரைக்கால் 1/2560, கீழிருமா 1/3020, கீழ்வீசம் 1/5002, கீழொருமா 1/6400, கீழ்முக்காணி 3/25600, கீழரைமா 1/12800, கீழ்க்காணி 1/25600, கீழரைக்காணி 1/51200, கீழ்முந்திரி 1/102400, இம்மி 1/1075200, அதிசாரம் 1/1838400 என்பவைதாம் கீழ்க்கணக்கின் பின்னங்கள். இதில் இம்மியை நாம் காணமுடிகிறது.சோழநாட்டு இன்னம்பர் என்னும் தலத்தில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், அத்தலத்து இறைவன் ஒவ்வொருவர் செய்கைகளையும் கீழ்க் கணக்குத் துல்லியமாக எழுதி வருகிறான் என்பதை,எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே என்ற பாடல் வழி கூறியுள்ளார். இதனை நாம் உணர்ந்தால் நிச்சயம் அறம் பிறழாமல் வாழ்வோம். இம்மி அளவுகூடத் தவறு செய்ய மாட்டோம்.முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You may also like

Leave a Comment

11 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi