Sunday, October 6, 2024
Home » அன்னமயகோசம் எனும் ஆடல் களம்

அன்னமயகோசம் எனும் ஆடல் களம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் யோக மரபின் பயிற்சியும் தேவைகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோகம் என்பது  சித்திகளை அடைதல், தாந்த்ரீகப் பயிற்சிகளைக் கற்றுத்  தேர்ந்து அமானுஷ்யங்களைச் செய்து காட்டுதல் என்கிற நிலையில்தான் இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு பின்னர்தான்  யோகக்கல்வி உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டு, அன்றாட தேவைக்கான மாற்று சிகிச்சை மற்றும் அடிப்படை ஆரோக்கியம் போன்ற காரணிகளுக்காகப் பயிலப்படுகிறது.நாம் உண்ணும் உணவே நம் உடல் என்றாகிறது. உண்ணும் உணவு அனைத்துமே அன்னம் என்றே அழைக்கப்படுவதால், அன்னத்தால் உருவான இந்தத் தளம் அன்னமயகோசம்.நாம் முன்னரே பார்த்த பஞ்சகோஷம் எனும் ஐந்து தளங்களிலான இந்த மனித வாழ்வில், முதல் மூன்று தளங்களில்தான் நாம் அன்றாடம் துயரை அனுபவிக்கின்றோம். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நம் உடல் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைகிறது. உதாரணமாக நீங்கள் இந்த கட்டுரையைப் படிக்க அரைமணி நேரம் ஆகுமெனில், படிக்கத் தொடங்கிய போது இருந்த உடலல்ல கட்டுரை முடியும்போது இருக்கும் நிலை. உங்களுடைய காலோ, முதுகுப்பகுதியோ, கழுத்தோ, இறுக்கமாகி இருக்கும் அல்லது கணமாகவோ, உளைச்சலுடனோ இருப்பதை உணரமுடியும். நம் ரயில் பயணங்களில் கவனித்திருக்கலாம். மனிதர்கள் தொடர்ந்து தங்களை அசைத்துக்கொண்டே இருப்பதையும், அரை மணி நேரத்தில் அசூயையாக உணர்வதையும், கூன் போட்டு உட்கார்ந்த ஒருவர் நிமிர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு மீண்டும் கூன் போட்டு அமர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். இந்த உடல் மொழிகள்  என்ன சொல்கின்றன ?நான் சமநிலையில் இல்லை. என்னைச் சீர் செய்  என்பதுதான் அதன் குரல். இது நமது  முதல் தளமான அன்னமயகோசத்தில் நிகழ்கிறது. நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அல்லது நாள் முழுவதும் செயலேதும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் இந்த உடல் தொடர்ந்து  ஒரு குறிப்பிட்ட மாற்றத்துக்கு உட்படுகிறது. உலகின் மிக மிருதுவான, குதிரையின் மென்முடியால் நெய்யப்பட்ட  ஆடம்பரமான,   மெத்தையின் பெயர் ‘விவிடஸ்’ என்பதாகும். இதன் விலை கிட்டத்தட்ட  பனிரெண்டு லட்சம் ரூபாய்கள். ஒருவேளை நாம் இதில் படுத்து நாள் முழுவதும் ஓய்வெடுத்தால்கூட நமது அன்னமயகோசம் எனும் நம்  உடல்  ஒரு சமநிலையின்மையை அடையும்.  ஆக இந்த உடல் அடையக்கூடிய சமநிலை யின்மையை நீக்க வெறும் ஓய்வு என்பது போதாது. அதையும் தாண்டி வேறு ஒன்று தேவையாகிறது. யோகமரபைப் பொறுத்தவரை இந்த சமநிலையின்மையை நீங்குவதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு, சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.  சில என்பது ஆரம்பகால நூல்களில் 84 என்று இருந்தது.  இன்று 1500க்கும் மேற்பட்ட பயிற்சிகளாக உருமாறியுள்ளன. இத்தனைப் பயிற்சிகளை நான் எப்போது கற்று தேர்வதென நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஆகவே நாம் பதஞ்சலி முனிவரின் சொல்லை கேட்கலாம். ‘சுகம் , ஸ்திரம் , ஆசனம்’ என்பது பதஞ்சலியின் யோக சூத்திரம்.அதாவது, எந்த நிலையில் இருக்கும்போது ஒருவர்  சுகமாகவும்  ஸ்திரமாகவும் உணர்கிறாரோ அதுவே ஆசனம்.இதில் ஒரு நுட்பமும் இருக்கிறது. உதாரணமாக, உங்களால் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமரவோ, நிற்கவோ முடிந்தால் உங்களை ஒரு யோகி என நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்.பதஞ்சலியின் சொல்லை இத்துடன் இணைத்துத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நவீன அறிவியல், உடலியங்கியல் போன்ற துறைகளின் கருத்துக்களையும் நாம் முக்கியமாகக் கருதவேண்டியுள்ளது.  ஒரு ஆரோக்கியமான உடல் என்பதற்கு நவீன அறிவியலில் பல்வேறு அளவீடுகளை வைத்துள்ளனர். அவற்றை அடைவதன் மூலமாகவும் நாம் ஒரு யோகியின் உடலை அடைந்துவிடலாம். அவற்றில் முதன்மையானது வளைந்து நெளியும் தன்மை  (FLEXIBILITY),  திடம் (STRENTH), சமநிலை (SENSE OF BALANCE), சுறுசுறுப்பு ( AGILITY ),  சீரான உடற்கட்டுமானம் (STRECTURAL ALIGNMENT) எனப் பல்வேறு அளவீடுகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டவைதான் அடிப்படை எனலாம். இந்த  அடிப்படையை அடைய, உற்ற துணையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருவிதான்  ஹடயோகம் எனும் யோகாசனம்.ஒரு ஹடயோகியின் உடல் என்பது உன்னதமான ஒன்று. அது தன்னை உயர்நிலை ஆற்றலில் வைத்துக் கொள்வதுடன், சுற்றியிருக்கும் ஒவ்வொரு உயிரையும், ஆற்றல் மையமாகத் தூண்டக்கூடியது. நீங்கள் சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்யத்தொடங்கிய சிறிது காலத்தில், அதாவது மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடத்தில், உங்கள் உடலின் விஷத்தன்மையை, சமநிலையின்மையை, சோர்வை, சலிப்பை, கடந்துவிடுவீர்கள். இது ஹடயோகியாக நீங்கள் மாறுவதற்கான முதல் தகுதி. சரி இதை எங்கிருந்து துவங்குவது? நாம் சதாசர்வ காலமும் உடலே பிரதானம் என திளைத்துக் கொண்டு  அல்லது நினைத்துக்கொண்டு இருப்பதால்,  அதற்கான பயிற்சிகளை  உடலிலிருந்தே தொடங்கலாம். அப்படி உடலை மையமாகவைத்து இயக்கக்கூடிய பயிற்சியாலேயே யோகமரபு ஆசனங்கள் என்று வகைமைப்படுத்துகிறது. ஒருவர் வெறும் பனிரெண்டு ஆசனங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த உடலின் அனைத்துச் சாத்தியங்களையும் அடைந்துவிட முடியும். எனினும், அவற்றைத் தேர்ந்தெடுப்பதில்தான் சவாலே இருக்கிறது. ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் இருந்தாலும், உங்கள் உடலுக்கான பயிற்சி எது என்பதை ஒரு  நல்லாசிரியரின் துணையுடன்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.ஆகவே நாம் அடிப்படைப் பயிற்சிகள் சிலவற்றை இங்கே காணவிருக்கிறோம். இது, ஒருவரை யோக சாதகராக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டது. இவற்றின் பெயர்கள், செய்முறை விளக்கம், பலன்கள் என அனைத்து விசயங்களையும் இனி பார்ப்போம்.தாடாசனம் (பனைமர நிலை )நின்ற நிலையில் செய்ய வேண்டிய ஆசனம் இது. கால்களை அரையடி அளவில் விளக்கி வைத்து, கைவிரல்களை கோர்த்து தலையின் மேல் வைத்து, மூச்சு உள்ளே வரும்பொழுது கை, கால்கள் இரண்டையும் மேல்நோக்கி, உயர்த்த வேண்டும். மூச்சு வெளியே செல்கையில், கைகளைத் தலைக்கும் , கால்களைத் தரையிலும் பதிய வைத்துவிட வேண்டும். இது பத்து முறை செய்ய வேண்டிய ஆசனம். இதை முடித்துவிட்டு, சவாசனம் எனும் ஆசுவாசமான படுக்கை நிலையில் படுத்துக்கொண்டு, உடலையும், இதயத்துடிப்பையும் கவனித்துவிட்டு எழுந்து கொள்ளலாம்.முதுகுத் தண்டில் ஏற்படுத்தி வைத்துள்ள அத்தனை இறுக்கங்கள், பிரச்சனைகளைச் சமன் செய்து, மிகச்சரியான உடற்கட்டுமானம் பெற உகந்த பயிற்சி இது.இதன் அறிவியல் பூர்வ விளக்கங்கள், செயல்படும் விதம், ஆயுர்வேதப் பார்வை, உளவியல் சார்ந்த விளக்கங்கள்  மற்றும் மேலும் பல பயிற்சிகளை வரும் தொடர்களில் படிப்படியாகக் கற்றுத் தேர்வோம்.மேலும் விவரங்கள் அறிய கீழே இருக்கும் சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.www.satyamtraditionalyoga.com மாடல்: சாரதாதொகுப்பு: யோகம் வளர்ப்போம்  

You may also like

Leave a Comment

thirteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi