அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு காலக்கெடு இல்லை: உயர் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க  கடைசி நாள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. தகுதியுடைய மாணவிகள் அனைவரையும் விண்ணப்பிக்க வைப்பதே எங்கள் நோக்கம் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்துக்கு தகுதியான மாணவிகளிடம் உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் உயர் கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரி வழியாக மற்றும் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்து வந்தனர். இத்திட்டத்துக்காக ஜூன் 25 முதல் ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. பிற உதவித்தொகைகளை மாணவிகள் பெற்றாலும் கூட இத்திட்டத்திலும் அவர்கள் பயன்பெறலாம். உதவி தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று ஏதும் குறிப்பிடவில்லை. தகுதி உடைய அனைத்து மாணவிகளும் இதில் பயன்பெற வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுவரை விண்ணப்ப பதிவு திறந்து இருக்கும் என்று உயர் கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கல்லூரிகள் திறக்கப்படும் வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு