அனைவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்

 

தூத்துக்குடி, ஜன. 26: அனைவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டுமென கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 14வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிக்ள நடைபெற்றது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: மக்களாட்சியின் மாண்பு, நடுநிலையான மற்றும் அமைதியான தேர்தலை நடத்திடவும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் நேர்மையுடன் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் நமக்கு கொடுத்திருக்க கூடிய முக்கியமான உரிமைதான் வாக்குரிமை. எந்தவொரு பாகுபாடும், வித்தியாசமும் இல்லாமல் அனைவரின் வாக்கும் முக்கியமானது. நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நம்மை ஆட்சி செய்யக்கூடிய அரசை தீர்மானிக்கக் கூடியது. அதற்கான உரிமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், இவ்வாறு பேசினார்.தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்கான 6 நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்களை கலெக்டர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக தூத்துக்குடி வஉசி கலைக்கல்லூரி அருகில் மாநகராட்சி பணியாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள் வரைந்திருந்த விழிப்புணர்வு கோலங்களை கலெக்டர் லட்சுமிபதி பார்வையிட்டார். இந்த கோலங்களில் வாக்களிப்பது நீங்கள் தாய்நாட்டிற்கு செய்யும் முதல் மரியாதை, எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல, என் ஓட்டு என் உரிமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) செந்தில் வேல்முருகன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி, தேர்தல் துணை வட்டாட்சியர் சிவகுமார், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், மாநகர நல அலுவலர் சுமதி, மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) ரெங்கநாதன், மாநகராட்சி கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, பொதுப்பிரிவு கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு