அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பாழடைந்த பறிமுதல் வாகனங்களால் சுகாதார சீர்கேடு: அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பாழடைந்த பறிமுதல் வாகனங்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், விஷ ஜந்துகளால் மகளிர் போலீசார், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம், காவல் நிலையம் நகரின் முக்கிய பகுதியான கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை, சுற்றுலா அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பேரூராட்சி அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம், புகழ் பெற்ற சுற்றுலா தலம், தர்கா, கோயில்கள், முதலை மற்றும் பாம்பு பண்ணை பல்வேறு கிராம ஊராட்சிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு, வாகன விபத்து, சாராயம் கடத்தல், மணல் கடத்தல், வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. அதன்படி, பறிமுதல் செய்யப்படும் கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு வருபவர்கள் ஒரு சில நேரங்களில் போலீசார் இல்லாததால் சற்று அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர். அந்த, சமயத்தில் விஷ ஜந்துகள் பறிமுதல் வாகனங்களில் இருந்து வெளியே வருவதால் அதை பார்த்து அலறியடித்துக்கொண்டு பயத்துடன் ஓட்டம் பிடிக்கின்றனர். மேலும், இரவு பணியில் இருக்கும் மகளிர் போலீசார் இரவில் காவல் நிலையத்துக்கு உள்ளே விஷ ஜந்துகள் வந்து விடுமோ என்ற ஒரு வித பயத்துடன் வேலை பார்க்கின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி உடனடியாக தலையிட்டு மாமல்லபுரம் காவல் நிலைய வளாகத்தில் பல மாதங்களாக பாழடைந்து வீணாக கிடக்கும் பறிமுதல் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!!

வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!!

யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை வழக்குப் பதிவு..!!