அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த இன்ஸ்பெக்டர், காவலரை தாக்கிய பாஜ நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கியது தொடர்பாக பாஜ நிர்வாகிகள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டினர். அப்போது அங்கு ரோந்து வந்த கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநரான காவலர் பாண்டி ஆகியோர், அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து அவற்றை பறித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பாஜ நகரத்தலைவர் சீனிவாசன் தலைமையிலான கட்சியினர் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பாஜ நகரத் தலைவர் சீனிவாசன், நிர்வாகி ரகுபாபு உள்ளிட்ட சிலர் சட்டையை பிடித்து இழுத்து கிழித்து தாக்கி காயப்படுத்தினர். இதைத் தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர். இருந்தபோதும் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பாஜ நகர தலைவர் சீனிவாசன், ரகுபாபு, வெங்கடேசன், பரமசிவம், பொன்சேர்மன், இந்து முன்னணி நகரச் செயலாளர் சீனிவாசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கைதான 6 பேரையும் கோவில்பட்டி கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது