அந்தியூர் அருகே 129 மூட்டை புகையிலை பொருட்கள் லாரியுடன் சிக்கியது

அந்தியூர், செப்.26: அந்தியூர் அருகே வாகன சோதனையில், 129 மூட்டை புகையிலை பொருட்களை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர்மலை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை சிறப்பு எஸ்ஐ முருகன், தலைமை காவலர் சென்னிமலை, காவலர் தேவராஜ், பர்கூர் தனிப்பிரிவு தலைமை காவலர் சேகர் ஆகியோர் பர்கூர் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் இரவு ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், சர்க்கரை மூட்டைகளுக்கு அடியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மூட்டைகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக லாரி மற்றும் அதில் இருந்தவர்களை பர்கூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (31), அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஸ்ரீநாத் (31) என தெரிய வந்தது.

போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். லாரியில் கடத்தி வரப்பட்ட 129 மூட்டைகளில் இருந்த 1220 கிலோ குட்கா பொருட்களையும், ரொக்கம் 8,400 ரூபாயையும் கைப்பற்றினர். மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் என விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா