அந்தியூரில் குருநாதசாமி கோயில் திருவிழா ஏற்பாடு; எம்எல்ஏ ஆய்வு

 

அந்தியூர், ஜூலை 18: அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோயில் ஆடி பெருந்தேர் திருவிழா நடக்க உள்ளது. நாளை (19ம் தேதி) பூச்சாட்டுதலுடன் துவங்கி, வரும் ஆகஸ்டு மாதம் 9, 10, 11,12 ஆகிய தேதிகளில் திருவிழா நடக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்தும் பக்தர்களும் கால்நடை சந்தையும் இங்கு கூடும். இது சம்பந்தமாக எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, வட்டார வளர்ச்சி துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் முன்னேற்பாடுக குறித்து இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக திருவிழா பேருந்து நிலையமாக செயல்படும் புதுப்பாளையம், குதிரை, மாட்டு சந்தைகள் நடைபெறும் கொன்னைமரத்தய்யன் கோயில் பகுதி, குருநாதசாமி வனக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். மேலும் போக்குவரத்து வசதிகள், கால்நடைகள் சம்பந்தமான மருத்துவ வசதிகள், பொதுமக்கள், பக்தர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் அமைத்து கொடுத்தல் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், கெட்டி சமுத்திரம் ஊராட்சி தலைவர் மாறன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சங்கராப் பாளையம் ஊராட்சி தலைவர் குருசாமி, மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் பெரியசாமி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் சதாசிவம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் மற்றும் வருவாய், காவல்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரத்துறை, கால்நடை, தீயணைப்பு துறையினர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்