Wednesday, July 3, 2024
Home » அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!

அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!

by kannappan
Published: Last Updated on

* அருணகிரி உலா 89 ஆவுடையார் கோயில் கருவறை முன் நிற்கிறோம்.‘‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை  சங்கரா ஆர் கொலோ சதுரர் ?அந்த மொன்றிலா ஆனந்தம் பெற்றேன்யாது நீ பெற்ற தொன்று என்பால் ?சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்திருப்பெருந்துறை யுறை சிவனே !எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே  ’’எனும் திருவாசகப் பாடல் நினைவுக்கு வர உள்ள முருக இறைவனை வணங்குகிறோம். நாம் நின்று வணங்குமிடம் தேவசபை. கருவறையைச் சுற்றி வருகிறோம். சொக்க விநாயகரையும் மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியையும் வணங்கி யோகாம்பிகை சந்நதிக்கு வருகிறோம். அம்பிகையும் அருவாகவே உள்ளாள். உயர்ந்த பீடத்தில் தங்கத்தாலான ஸ்ரீ சக்கரத்தின் மீது அம்பிகையின் பாதங்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. சிவனைப் பதியாக அடைய வேண்டி, நாரதர் கூறியபடி அம்பிகை குருந்த வனத்தில் வந்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. நடைமுறையிலுள்ள மற்ற சக்கரங்களின்றும் அம்பிகையின் சக்கரம் வேறுபட்டுள்ளது. 43 முக்கோணங்களையும், 3 பூவட்டங்களையும் 3 சதுரங்களையும் கொண்டது. கோணங்களில் அட்சரங்கள் எழுதப்பட்டுள்ளன. இச் சக்கரம் ரகசிய பூஜையிலுள்ளது. கருங்கல் பல கணி வழியாகத் தான் அம்பிகையின் பாதங்களையும் பார்க்க முடியும். சிவ யோக நாயகி பிள்ளைத் தமிழ் எனும் நூல் சக்கரத்தின் வடிவை விளக்குகிறது. பக்தர்களுக்காக வேண்டி சக்கரத்தின் பிரதியாக அம்பிகை சந்நதியின் முன்பாக விதானத்தில் புடைப்புச் சித்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லரி எனப்படும் கெத்து வாத்யம் பல ஆண்டுகளாக அம்பிகையின் சாயரட்சை பூஜையில் வாசிக்கப்படுகிறது. கருவறைக்கு நேர் பின்னே குருந்த மூல சுவாமி உள்ளார். தென் முகமாக குருவாய் எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு உபதேசிப்பது போன்ற சிறு சிற்பங்கள் உள்ளன. விழாக்காலங்களில் இங்கு ஐதீக உபதேசக் காட்சிகள் நடைபெறுகின்றன.ஆடல் வல்லான் இங்கு கல் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சந்நதிக்கு வலப்புறம் திருவாசக ஏடுகள் வைக்கப்பட்டுள்ள திருவாசகக் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் ஆறு படிகள் ஏறி முருகன் சந்நதியை அடையலாம். இங்கு ஒரு திருப்பெருந்துறைப் பாடலைப் பாடுகிறோம்.‘‘இரத்தமும் சியும் மூளை எலும்புட்தசைப் பசுங்குடல் நாடி புனைந்திட்டுஇறுக்கு மண்சல வீடு புகுந்திட் டதில்மேவிஇதத்துடன் புகல் சூதுமிகுந்திட்டகைத்திடும் பொருளாசை யெனும் புள்தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயாபிரத்தம் வந்தடு வாத சுரம் பித்துளைப்புடன் பல வாயுவி மிஞ்சிப்பெலத்தையும் சில நாளுளொடுங்கித் தடிமேலாய்ப் பிடித்திடும் பல நாள் கொடு மந்திக்குலத் தெனும்படி கூனியடங்கிப்பிசக்கு வந்திடு போது பினஞ்சிச் சடமாமோ.தரித்த னந்தன தானை தந்தத்திமித்தி மிந்திமி தீதக திந்தத்தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் டியல்தாளம்தனத்த குந்தகு தானை தந்தக்கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்ஜசலத்துடன் கிரி தூள் படெறிந்திட்டிடும்வேலா சிரத்துடன் சுரம் ஏடு பொழிந்திட்டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்சிரத்தினுங் கமழ் மாலை மணம் பொற் சரணோனே செகத்தினின் குருவாகிய தந்தைக்களித்திடும் குரு ஞான ப்ரசங்கித்திருப்பெருந்துறை மேவிய கந்தப் பெருமாளே’’பொருள் :-ரத்தம், சீழ், மூளை, எலும்புகள், உள்ளே உள்ள மாமிசம், பசிய குடல், நாடிகள் இவற்றால் வடிவமைக்கப்பட்டு, பிருத்வி, அப்பு முதலான தத்துவங்களாலானது இந்த வீடு; இதில் நுழைந்து சுகத்தைத் தருவன போன்ற வஞ்சகப் பேச்சுக்கள் அதிகரித்து, கிளர்ந்து எழும்பும் பண ஆசை எனும் பட்சியானது, பிறர் நல்ல உபதேசங்கள் செய்தும் தெளிவு அடையாமலுள்ளது. மேலும் மேலும் உலக ஆசையாகிய வானில் பறந்து கொண்டு, பிரபஞ்ச மாயை அதிகமாகத் தாக்குவதால் உண்டாகும் வாதம், ஜூரம், பித்தம் இவைகளுடன் உடல் வேதனையும் உஷ்ணமும் அதிகரித்து உடல் வலிமையும் சில நாட்களில் குறைந்து விடுகிறது.கையில் தடியைப் பிடித்துக் கொண்டு பல நாட்கள் செல்ல, குரங்கினத்தவன் என்று அனைவரும் கூற, மரண நேரம் நெருங்குகிற சமயத்தில் மிகவும் அச்சப்பட்டு உயிரை விடும் இந்தத் தேசம் வேண்டுமா ?  பலவித தாள ஒலிகளுடன் கோபித்து எழுந்து வந்த சூரனுடல் சிதறிவிழ, கடலும் கிரௌஞ்ச மலையும் பொடியாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே தலை வணங்கி கரங்களால் மலர்களைச் சொரிந்து உரத்த ஒலியுடன் தோத்திரம் செய்து தேவர்கள் உன்னை நமஸ்கரிப்பதால், அவர்கள் தலைகளில் அணிந்துள்ள பூமாலைகளின் நறுமணம் வீசும் திருவடிகளை உடையவனே !உலகிற்கு ஆதி குருவான தட்சிணாமூர்த்தியாகி வீற்றிருக்கும் உன் தந்தைக்கே ஞானோபதேசம் செய்த குருநாதனே ! உமது தந்தை மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் செய்த திருப்பெருந்துறையில் விருப்பத்துடன் வீற்றிருக்கும் சுந்தப் பெருமாளே !‘‘செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுறநடித்த சங்கரர் வழிவழி அடியவர்திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்திருக்குழந்தையு மென…….’’- திருப்பரங்குன்றம்சிவகுமரனை வணங்கி மீண்டும் வெளிப்பிராகாரத்திற்கு வருகிறோம், வெயிலுவந்த விநாயகரை மீண்டும் வணங்கி, பிராகாரத்தின் வட கோடியிலுள்ள தியாகராஜ மண்டபத்தை அடைகிறோம். இம்மண்டபத் தூண்களிலும் குதிரை வீரர்கள் சிற்பங்கள் உள்ளன. முத்து விநாயகர் வீற்றிருக்கிறார். தென்பாண்டி நாட்டில் முத்துக்களை இறைவன் முன்னே கொட்டி அலிந்து கொடுப்பது வழக்கம். அவ்வறையுருவங்களை முத்து லிங்கம், முத்துக் சுந்தர், முத்து விநாயகர் என்றழைப்பர். மண்டபத்தின் முகப்பில் திருவடி தீட்சை, ஸ்பர்ச தீட்சை, நயன தீட்சை ஆகிய மூன்று உபதேசக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கில் உள்ள மகாலிங்கசுவாமி பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறார்.பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் செழித்து வளர்ந்துள்ள குருந்த மரத்தைக் காணலாம். அதன் கீழ் விநாயகரும் நாகப்பிணையலகளும் இருப்பதைப் பார்க்கிறோம். அடுத்துள்ள மண்டபத்தில் பெரிய பாறை மீது குருவடியில் சிவ பெருமான் அமர்ந்திருக்க, மாணிக்கவாசகர் எதிரே கை கூப்பி நின்று உபதேசம் கேட்கிறார். முழுங்காலுக்கு மேலாக முண்டு உடுத்தி வெண்ணீறு பூசி, தலையிலும் மேனியிலும் ருத்ராட்சம் தரித்துள்ளார்.    ‘‘குருவின் உருவென வைத்திட்டறபுதம்குதிரை கொள வரு நிறை தவசி தலைகொற்றப் பொற்பதம் வைத்திட்டறபுதம்ஏற்றிப் பொற் பொருளிட்டுக் கைக் கொளும் முதல்வர்…’’[ சிதம்பரம்]என்று பாடுகிறார் அருணகிரியார்.குருந்த மரத்தடிச் சந்நதியில் எஞ்சிய இரு திருப்புகழ்ப் பாக்களையும் சமர்ப்பிக்கிறோம்.‘‘பொருப்பகம் பொடிபட அரக்கர்தம்  பதியொடுபுகைப்பரந் தெரியெழு விடும் வேலாபுகழ்ப் பெருங் கடவுளர் களித்திடும் படி புவிபொறுத்தமந்தரகிரி     கடலூடேதிரித்த கொண்டலு மொரு மறுப்பெறுஞ் சதுமுகதிருட்டியெண் கணன் முத லடிபேணத்திருக் குருந்தடியமர் குருத்வ சங்கரரொடுதிருப்பெருத்துறை யுறை பெருமாளே  !பொருள்:  கிரெளஞ்ச கிரியின் உள் பாகம் தூளாக அசுரர்களும், அவர்கள் ஊர்களும் புகையுடன் எரியும் நெருப்பில் மடிய வேலைச் செலுத்தினவனே !பெருமை மிக்க பெரிய தேவர்கள் மகிழும் படி பூமியைத் தாங்கிய மந்தர கிரியைச் சமுத்திரத்தில் சூழலச் செய்த மேகநிறத் திருமாலும், தமது தலைகளுள் ஒன்றை இழந்த குறைபாடுள்ள நான்கு முகங்களிலும் பார்க்கும் திறம் உடைய எட்டுக் கண்களைக் கொண்ட  பிரம்மனும், முன்பு தம் பாதத்தைத் தொழ, குருந்த மரத்தடியில் வீற்றிருந்த குரு மூர்த்தியான சங்கரருடன் திருப்பெருந்துறையில் விளங்கும் பெருமாளே ![‘‘கொழுமலர்ச் சோலைத் திருப்பெருத்துறையிற் குருந்தடியிருந்தருள் பரனே ’’ – திருப்பெருத்துறைப் புராணம் ]திருப்பெருந்துறையில் பாடப்பட்ட மற்றுமொரு திருப்புகழில் ஊரின் அன்றைய வளமை குறிப்படப்பட்டுள்ளது.‘‘நிலவரும்பு தண்தரளமு மிளிரொளிர்பலளமும் பொரும் பழனமு மழுகுறநிழல் குருந்தமுஞ் செறி துறை வளர்வுறு பெருமாளே’’குருந்தடி இறைவனையும் அடியவரையும் வணங்கி தொடர்ந்து நடக்கிறோம். வசந்த மண்டபத்தில் நடுவில் ஒரு மேடையும் அதைச் சுற்றி நீராழியும் உள்ளன. ஆனி, மாரிகழி மாதங்களில் விழாக்களின் போது ஐந்தாம் நாள் மாணிக்கவாசகர் இம் மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சி தருகிறார். மேடையின் வடக்கே வசந்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆவுடையார் கோயிலில் கனகசபை, நடனசபை, தேவசபை, சத்சபை, சித்சபை, ஆனந்த சபை எனும் ஆறுசபைகள் உள்ளதால் இறைவன் ஷட்சபா ரமணர் – ஆறு சபை அழகர் என்று அழைக்கப்படுகிறார். இச் சபைகள் ஆறு ஆதாரங்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன.முற்காலத்தில் கட்டிங்களின் வெளி விளிம்பில் மழை நீர் வழிந்தோடவும் வெயில் கூரையைத் தாக்காதிருக்கவும் மரத்தால் வளைலான கூரைகள் அமைக்கப்படுவது வழக்கம். கை மரங்கள் எனப்படும் வளைந்த வடிவாகச் செய்யப்பட்ட மரத்துண்டுகளைப் பொருத்தி அதன் மீது பலகைகளை அடித்துப் பின் உலோகத் தசுடுகளைப் பொருத்துவர். ஆனால் ஆவுடையார் கோயிலில் சிற்பிகள் ‘கொடுங்கை’ எனப்படும் இவ் வளைந்த கூரைகளை முழுதும் கல்லிலேயே வடித்துள்ளனர் என்பது மிகுந்த வியப்பிற்குரிய விஷயமாகும். முன் காலத்தில் ஒப்பந்தச் சீட்டு எழுதித்தரும் சிற்பிகள், ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவலஞ்சுழி பலகணி, திருவீழி மிழலை வௌவால் நெத்தி மண்டபம் நீங்கலாக மற்ற எந்த வேலைகளையும் செய்து தருவோம் என்று எழுதிக் கொடுப்பது வழக்கமாம் !கோயிலை வலம் வந்து பஞ்சாட்சர மண்டபம் வழியாக வரும் பொழுது மீண்டும் குதிரைச்சாமியைத் தரிசித்து மெய்ம்மறக்கிறோம். ‘‘கருவாத நீங்கிடக் கனவிலாவது உன் கோலத்தைக் காட்டு ‘‘என்றாரே வள்ளலார், அவருக்கு அந்தக் காட்சி கிடைத்ததானை என்ற கேள்வி எழுகிறது ! பெருமான் கனவிலும் காட்ட வில்லை என்று அவரே வருந்துகிறார் !‘‘ பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்கண்ணேறு படும் என்றோ கனவிலேனும்காட்டு என்றால் காட்டுகிலாய் ! கருணை ஈதோ?’’ – என்று அரற்றுகிறார்.அருணகிரியார் கூறும் ‘குருத்வசங்கரர்’ ‘ஞானப்ரசங்கம்’ செய்த திருக்குருந்த மரமாகவோ அதில் அமர்ந்த ஒரு பறவையாகவோ நாம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.         ‘‘செம் தழல் புரை திருமேனியும் காட்டித்திருப் பெருந்துறை உறை கோயிலும் காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே’’என்ற மணியான வாசகத்தை நினைவு கூர்ந்தபடித் திருப்பெருந்துரைக் கோயிலினின்றும் வெளியே வருகிறோம்.(உலா தொடரும்)தொகுப்பு: சித்ரா மூர்த்தி

You may also like

Leave a Comment

twelve − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi