Wednesday, July 3, 2024
Home » அதென்ன மூன்றடி நிலம்?

அதென்ன மூன்றடி நிலம்?

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் வணக்கம் நலந்தானே!‘‘நிற்பதற்கும், படுத்துறங்கவும் மட்டுமே நிறைய நிலம் வேண்டுமே. நீங்கள் போயும் போயும் மூன்றடி மண்ணை, அதுவும் இவ்வளவு செல்வத்திற்கும் அதிபதியான என்னிடம் மூன்றடி மட்டும் கேட்கிறீர்களே. இது நியாயமா’’ என்று மகாபலி வாமனரைப் பார்த்துக் கேட்டான். சுக்ராச்சார்யார் சட்டென்று வந்தது யாரென தெரிந்து கொண்டார். ‘ஐயோ… பலி மோசம் போய்விடுவானே. அசுர குலத்தை யார் காப்பாற்றுவார்’ என்று பரபரப்பானார்.‘‘சரி… உனக்கு வேண்டியது மூன்றடி மண்தானே’’ என நீர் நிரம்பிய பஞ்சபாத்திரத்தை கையிலெடுத்து தாரை வார்ப்பதுபோல பலி நின்றான்.சுக்ராச்சார்யார் சட்டென்று தனியே பலியை அழைத்துப் போனார். இவனை யாரென்று நினைத்தாய். தேவர்களின் பொருட்டு அதிதியின் வயிற்றில் பிறந்து வளர்ந்த வாமனன். இவன் தோற்றம் சிறிது. ஆற்றல் பெரிது. உன் குலமே அழிந்துவிடும்’’ என்றார்.பலிச் சக்ரவர்த்தி குனிந்து வாமனரின் அந்த முத்து போன்ற நகங்களுள்ள பாதங்களை கண்டான். மென்மையாகப் பற்றினான். மெல்ல மேலே பார்க்க வாமனரின் திருமேனி நெடுநெடுவென வளரத் தொடங்கியது. வானம் தாண்டியது. மேலேழ் லோகம் பரவியது. திசையெங்கும் அடைத்து நின்றது. ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவரின் திருமேனியாக உள்ளது பார்த்து தன்னை மறந்தான். ஓரடியில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் பிரம்ம லோக பரியந்தம், சகல லோகத்தையும் அளந்து அதையும் தாண்டி நின்றது. பிரம்ம லோகத்தில் பெருமாளின் திருவடியை கண்ட பிரம்மா ஆஹா என வியந்து அந்த பாதத்தின் நகக் கணுக்களில் தான் பூஜைக்காக வைத்திருந்த தீர்த்தத்தை அபிஷேகமாக செய்தார். அந்த தீர்த்தம்தான் கங்கை எனும் பெயரோடு பெருகினாள். திருவிக்ரமனாக நெடிதுயர்ந்த கோலத்தில் நின்றவன் மூன்றாவது அடிக்கு இடமில்லாமல், இப்போது பலிச் சக்ரவர்த்தியே இரண்டடிக்கே இடமில்லை. மூன்றாவது அடிக்கு இடம் சொல்’’ என்றார். ‘‘எம்பெருமானே. நான் பிரகலாதனின் பேரன். பொய்யன் ஆகமாட்டேன். இதோ என் சிரசில் வையுங்கள்’’ என்றார். இதில் மூன்றடி நிலம் என்பதற்கு வேதாந்திகள் வெவ்வேறு அர்த்தங்கள் கொடுக்கின்றார்கள். இங்கு மூன்றடி நிலம் என்பது வெறும் காலால் அளப்பது மட்டுமல்ல. தான் ஜீவன் என்று கருதும் ஒருவருக்கு மூன்று உணர்வு நிலைகள் உண்டு. அதாவது மூன்று நிலங்களில் அவன் வாழ்கிறான். முதலாவது ஜாக்ரத் – இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் உலகம். இதையே உண்மை என்று நினைத்தல். இரண்டாவது – சொப்பனம், தானே ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு மயங்கியிருத்தல், மூன்றாவது சொப்பனத்தையும் தாண்டியுள்ள கனவுகளற்ற தூக்கம். இந்த மூன்று நிலையில்தான் ஒரு ஜீவன் மாறி மாறி சஞ்சரித்துக் கொண்டேயிருக்கும். ஒரு குருவின் அனுக்கிரகத்தாலேயே இந்த மூன்று நிலையும் உங்களுக்கு சுட்டிக் காட்டப்படும். இந்த மூன்று நிலையையும் நிஜமென்று எண்ணிக் கொண்டிருக்காதே என்று விலக்கச் சொல்லும். அதற்கு அப்பால் எப்போதும் சாட்சி மாத்திரமாக விளங்கும் துரீயம் எனும் ஞான நிலமே உன் சொரூபம் என்று குரு காட்டிக் கொடுப்பார். அப்படி குருவானவர் இந்த மூன்று நிலங்களையும் களைந்து இதற்கு வேராக விளங்கும் மூலமான நான் எனும் அகங்காரத்தை தமது திருவடியால் அழுத்தும்போது ஜீவன் தன் சொரூப ஞான நிலையை எய்துகின்றது. மகாபலி தான் எனும் அகங்காரத்தை பலி கொடுத்தான். கொடுத்ததோ கொஞ்சம். பெற்றதோ அகண்டம்.புராணங்கள் நுட்பமானது. அது பெரும் புதையலை தாங்கி வருவது. மெல்ல களைந்து பார்க்க ஞான ரத்தினங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கும்.தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

You may also like

Leave a Comment

12 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi