அதிவேக பஸ், வேன்களில் அலற விடும் ஏர் ஹாரன்கள்: போலீசார் பறிமுதல் செய்ய கோரிக்கை

சிவகங்கை, செப். 27: சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பஸ், வேன்களில் அதிக சத்தத்தை எழுப்பும் ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் காரைக்குடி-மதுரை, திருப்பத்தூர்-மதுரை, சிவகங்கை-மதுரை, பரமக்குடி-காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ரூட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மினி பஸ்கள், தனியார் டிராவல்ஸ் பஸ்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஹாரன்களை பயன்படுத்தி தொடர்ந்து சத்தம் எழுப்பவது, டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் அருகில் வந்து திடீரென சத்தம் எழுப்புவதால் அவர்கள் அதிர்ச்சியடையும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற ஆர் ஹாரன்கள் டூவீலர்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. ஏர் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது, சாதாரண ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிமுறை இருந்தும், தனியார் வாகன நிர்வாகத்தினர் இதை பொருட்படுத்துவதில்லை. அதிக மக்கள் நடமாடும் பகுதி, பள்ளிகள், மருத்துவமணை உள்ளிட்டவை இருக்கும் பகுதிகளிலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக சத்தத்தை எழுப்புவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. புகார் எழும்போது மட்டும் போக்குவரத்து அலுவலர்கள் அந்த வாகனங்களை பரிசோதனை செய்கின்றனர். பின்னர் அதுகுறித்து கண்டுகொள்வதில்லை. இதனால் டூவீலர் வாகன ஓட்டிகள், முதியோர், குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகங்கை பிரபு கூறியதாவது:நகரின் உட்புற சாலைகளில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் அதி வேகத்தில் தனியார் பஸ்கள் வருகின்றன. இந்த வேகத்தில் வரும்போது ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால் சாலைகளில் செல்வோர் நிலைகுலைந்து போகின்றனர். பள்ளிகள், மருத்துவமனை, நகரின் உட்பகுதிகள் என எதையுமே இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏர் ஹாரன்களை பயன்படுத்துவது, அதிக வேகத்தில் செல்வதை போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா