அதிமுக நிர்வாகி வீட்டில் 12 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை பெரணமல்லூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்

பெரணமல்லூர், செப்.26: பெரணமல்லூர் அருகே பட்டப்பகலில் அதிமுக நிர்வாகி வீட்டில் 12 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த தவணி கிராமத்தை சேர்ந்தவர் மணி(67). அதிமுக ஒன்றிய பொறுப்பில் உள்ள இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே, நேற்று முன்தினம் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு, சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றனர். பின்னர், மாலை 6 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, அறையில் உள்ள பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த வளையல், கம்மல், ஆரம் போன்ற தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும், பக்கத்தில் உள்ள மகன் சசிக்குமாரின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 சவரன் தாலி சரடும் திருட்டுபோனது தெரியவந்தது.

மொத்தம் 12 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோக்களில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு, மீண்டும் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மணி பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைவரிசை மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா