அதிமுக குழப்பத்தை பயன்படுத்தி ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும் தாமரை கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘குழப்பத்தில் கிடக்கும் அதிமுக தொண்டர்களை இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளதாமே பாஜ..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் என தனித்தனியாக பிரிந்துவிட்டார்கள். இதனால் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே சசிகலா ஒரு பக்கம் இருக்க தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் என 3 ஆக பிரிந்துள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு பாஜ தன்னுடைய ராஜதந்திர பணியை தொடங்கி உள்ளது. ஒரே நாளில் மாநிலம் முழுவதும் மாவட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சியை பலபடுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதத்தினர். அதிமுக பிளவுபட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி கொண்டு அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுக்க பாஜ காய்நகர்த்தி வருகிறது. எப்படியாவது பாஜவை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாம். இதனால் அதிமுகவில் உள்ள சில முக்கிய புள்ளிகளை இழுக்கும் வேலையில் பாஜ தீவிரமாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘சின்ன மம்மி சகோதரர் ஏதோ ரகசிய திட்டம் வச்சிருக்காராமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியை  ஒரேயடியாக தலைமுழுகி விட்டு மாற்று கட்சிக்கு சென்று விடலாம் என மாவட்ட,  ஒன்றிய, நகர மாஜி நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளார்களாம்.. இந்த தகவல்  சேலத்துக்காரர், தேனிக்காரர் காதுக்கு சென்றதாம். இதனால் அவர்கள், அவரது  ஆதரவாளர்களான மாஜி அமைச்சர்கள் மீது கடும் டென்சனில் உள்ளார்களாம். இந்த  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த சின்னமம்மி சகோதரர் முதல் கட்டமாக  நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், மன்னர், மலைக்கோட்டை, கடலோரம் ஆகிய  மாவட்டங்களை சேர்ந்த மாஜி அமைச்சர்களை சின்னமம்மி பக்கம் இழுப்பதற்கான  மாஸ்டர் பிளான் போட்டுள்ளாராம். இது வெளியே கசியாமல் இருக்க சின்னமம்மி  சகோதரர் கவனமாக செயல்பட்டு வருகிறாராம். டெல்டா மாவட்டம் முழுவதும் சின்ன  மம்மி சகோதரர் டீம் அதற்கான வேலையில் ரகசியமாக இறங்கி இருக்கிறதாம்..’’  என்றார் விக்கியானந்தா.  ‘‘கூட்டம் கூட்டுற விஷயத்தில் மாங்கனி இலைக்கட்சியில் சலசலப்பாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.  ‘‘இலை  கட்சி ஆட்சியை மக்கள் அப்புறப்படுத்திய பிறகு கீழ்மட்ட நிர்வாகிங்க பாடு  மிகவும் திண்டாட்டமா இருக்காம். மாங்கனி நகருக்கு இடைக்கால பொ.செ.  வந்தாலும் கூட்டம் சேர்க்கணும், கட்சி ஆபீஸ் பூட்டை திறந்தாலும்  கூட்டத்தை  அழைச்சிட்டு வந்து குவிக்கணும். அப்பத்தான் தொண்டர்கள் மெச்சும்  தலைவருன்னு எல்லோரும் ஏத்துக்கிடுவாங்கன்னு மாங்கனி மாஜி வாய்மொழி உத்தரவு  போட்டிருக்காராம். இதுதொடர்பா ஒவ்வொரு முறையும் அவரு ஊருக்கு வரும் போது  மீட்டிங் போடுறாராம். எல்லா வட்டத்திடமும் மாங்கனி நகரே நடுங்குற மாதிரி  கூட்டத்தை கூட்டிட்டு வரணும் என்று கறாராக சொல்றாராம். அப்படித்தான்  அன்றைய மீட்டிங்குலயும் சொல்லியிருக்காரு. பொறுமையா  கேட்டுக்கிட்டிருந்த புதிய பகுதி செயலாளர் ஒருத்துரு, திடீருன்னு  கொந்தளிச்சிட்டாராம். ‘‘எல்லா கூட்டத்திலும் எங்களையே கூட்டிக்கிட்டு  வாங்க, வாங்கன்னு சொல்றீங்க. ஆனா, போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்க  ஓடிவந்து முன்னே நிக்கும் மாஜி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சார்பு அணி  செயலாளர்களை ஏன் சொல்லல? எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துப்பான்னா, கீழ  இருக்குற இவங்களுக்கு என்ன வேலை என்று ஒரே போடு போட்டாராம். இதனால் அந்த  கூட்டத்துல பெருத்த சலசலப்பு ஆகிருச்சாம். எதுக்கு, ஏன்னு கேள்வி கேட்கும்  இவருக்கு பதவி கொடுக்காதீங்கன்னு சொன்னா கேட்டீங்களான்னு, மாவட்டத்தை  பார்த்து சக மாஜிக்கள் இப்போ கொஸ்டீன் மேல கொஸ்டீன் எழுப்பிக்கிட்டு  இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘வில்லங்க அதிகாரியை பற்றி ஏதோ சேதி இருக்கிறதா சொன்னியே..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘சொல்றேனே..கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணிபுரிந்த விநாயகர் பெயர் கொண்ட ஒரு அதிகாரி தற்போது சேலத்தில் பணிபுரிகிறார். அருகில் உள்ள மாவட்டத்துக்கும் இவர்தான் பொறுப்பு அதிகாரி. இவர், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, மாஜி அமைச்சருக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ரெய்டு நடத்தியபோது இவர் மட்டும் சிக்கவில்லை. இது, அதிகாரிகள் மட்டத்தில் ஆச்சரியமாக பேசப்படுகிறது. இவர், சேலத்தில் பணிபுரிந்தாலும், மீண்டும் கோவை மாவட்டத்துக்கு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒரு மீடியேட்டர் மூலம் துறையின் மேலிடத்தில் பேசி வருகிறாராம். இவரது வீடு கோவை வெள்ளலூரில் உள்ளது. மேலும், கோவை செட்டிபாளையத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஒன்றரை கோடி ரூபாயில் கட்டியுள்ளார். தெலுங்குபாளையத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு, திருச்சி ரோட்டில் மூன்று கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்பு என கோவையை சுற்றிச்சுற்றி பல சொத்துக்கள் வாங்கிப்போட்டுள்ளார். இதன்மூலம், மாதம் பல லட்சம் ரூபாய் வாடகை வருகிறதாம். ‘சொத்துக்கள் எல்லாம் கோவையில் இருக்கும்போது, நான் மட்டும் ஏன் சேலத்தில் பணிபுரிய வேண்டும்.., அதனால… கோவைக்கு மாறி வந்துட்டாத்தான் பரவாயில்லை…’ என சக அதிகாரிகளிடம் பேசி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா