அதிமுக ஆட்சியில் 2011ல் அறிவிக்கப்பட்ட திருமழிசையில் துணைகோள் நகரம் திட்டம் என்னாச்சு?.. திமுக எம்எல்ஏ கேள்வி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன், வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: திருவள்ளூர் நகராட்சியை பெருநகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும். சேதம் அடைந்துள்ள நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், 2006ல் கலைஞர் ஆட்சியில் அறிவித்த பாதாள சாக்கடை திட்டம், குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை இந்த ஆண்டே சீரமைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டாக நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புறத்தை நோக்கி வரும் மக்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளை கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டுதான், 1970ல் அன்றைய முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியம் அமைத்தார். 1975ல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த துறை பின்னடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் என்று விஷன்-2023 என்று அறிவிப்புகள், அறிவிப்பு நிலையிலேயே இருந்தது. குடிசையில்லா தமிழகம் என்றார்கள். அதுவும் முழுமையாக நடைபெறவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை பகுதியில் துணைகோள் நகரம் உருவாக்கப்படும் என்று 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மானிய கோரிக்கையில் அந்த திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். இப்போது 2021ம் ஆண்டுக்கு வந்துவிட்டோம். கடந்த 10 வருடத்தில் அந்த இடம் எந்த பயன்பாட்டுக்கு வந்தது என்றால், கொரோனா காலத்தில் அந்த பகுதியில் காய்கறி மார்க்கெட் வைப்பதற்குதான் உதவியது. துணைகோள் நகரம் அமைக்கப்பட்டிருந்தால் திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சி அடைந்திருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லையோ, அதேபோன்றுதான் திருமழிசையிலும் நடந்தது. குடிசையில் வாழும் மக்களை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும் என்றால் அது நமது முதல்வரால்தான் முடியும்.அமைச்சர் தா.மோ.அன்பரசன்: அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின்படி மப்பேடு-1, மப்பேடு 2, அருங்கோணம் பகுதியில் 3 திட்டங்கள் என 3912 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.509.59 கோடியில் கட்ட ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு 3912 குடியிருப்புகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்காக இதுவரை 15.31 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வி.ஜி.ராஜேந்திரன்: கடந்த அதிமுக ஆட்சியில் மோசமான நிர்வாகத்துக்கு உதாரணம், 2014ல் போரூர் முகலிவாக்கம் 11 மாடி கட்டிடம் விழுந்ததுதான். அதில் 69 பேர் இறந்து போனார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சிஎம்டிஏ அனுமதி கொடுக்கும்போது அதற்கு உண்டான விதிகளை பின்பற்றுவது இல்லை. கட்டிடம் கட்டும்போது ஒவ்வொரு கட்ட பணிகள் முடிந்ததும் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சிஎம்டிஏ சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை