அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 26,424 மட்டுமே பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவலை பதிவு செய்துள்ளார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக  சட்டப் பேரவையில் நேற்று தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:   தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை மாநகரில் உள்ள 199 திட்டப்பகுதிகளில் 1 லட்சத்து 15 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், இதர நகரங்களில் உள்ள 155 திட்டப்பகுதிகளில் 58 ஆயிரத்து 107 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் சேர்ந்து மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 107 அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாரியத்தால் கட்டப்பட்டு பராமரிப்பில் உள்ளன.  எதிர் கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ்., 2019-20 ஆண்டில் மானியக் கோரிக்கையில் பேசும் போது “2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த 8 ஆண்டுக் காலத்தில் ரூ.7,622.87 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரம் ஆகும். 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் 1 லட்சத்து 11 ஆயிரம். இந்த சாதனையைப் பார்த்து நமது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனதிற்குள் இவ்வளவு பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளார்களா என வியந்து கொண்டிருப்பது நம் கண் முன்னே தெரிகிறது” என்று பேசினார். அவர் குறிப்பிட்டுள்ளது போல் இருந்திருந்தால், வாரியத்தின் வசம் 2,66,000 வீடுகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் வாரியத்தின் வசம் 1,73,000 வீடுகள் மட்டுமே உள்ளது. உண்மையில் அதிமுக ஆட்சியில் தொட்ங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 26,424 மட்டும் தான். இன்று வரை 248 திட்டப் பகுதிகளில் சுமார் 93,000 வீடுகள் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இவைகளை கட்டி முடித்து பயனாளிகளுக்கு ஒப்படைக்க ஒராண்டுக்கு மேல் ஆகும். கட்டி முடிக்கப்பட்ட 26,424 வீடுகளில் உங்கள் ஆட்சி காலத்தில் மக்கள் குடியேறிய வீடுகள் 2,920. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு பயனாளிகளின் பங்களிப்புத் தொகை குறைத்த பின் வழங்கப்பட்ட வீடுகள் 7,805. மீதமுள்ள வீடுகள் யாரும் குடியேறவில்லை. இதற்கு காரணம் தனிநபர்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, நகரங்களை விட்டு வீடுகளை வெகுதொலைவில் கட்டியது ஆகும். இதுமட்டுமல்ல சுற்றுசூழல் அனுமதி பெறாமலேயே சுமார் 2,000 வீடுகளுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்டு அவைகளுக்கு குடிநீர் இணைப்பு, மின்சார வசதி ஆகியவை வழங்கப்படவில்லை. இவ்வாறு வாரியத்தையே நீங்கள் பாழ்படுத்தி விட்டீர்கள். எதிர் கட்சி துணைத் தலைவர் கட்டியதாக குறிப்பிட்ட 1,55,000 வீடுகள் என்பது உண்மைக்கு மாறான தகவல். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு