அதிமுக ஆட்சியில் ஏலம் எடுத்தவர்கள் கட்டண தொகை செலுத்த வில்லை மார்க்கெட்டில் கழிப்பறைகளுக்கு பூட்டு

மதுரை : மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில், கழிப்பறைகளுக்கு அதிமுக ஆட்சியில் ஏலம் எடுத்தவர்கள் கட்டணத் தொகை செலுத்தாததால், தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கழிப்பறைகளை பூட்டி விட்டனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 500க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து காய்கறிகள் மொத்தமாக இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து, மதுரை மாவட்டம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டத்திற்கு காய்கறிகள் சப்ளை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட் நள்ளிரவு 2 மணிக்கு துவங்கி, காலை 8 மணி வரை இயங்குகிறது. பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட்டிற்காக 3 கழிப்பறைகள் கடந்த 2008ல் கட்டப்பட்டது. அது இலவச கழிப்பறையாக இருந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில், இலவசத்தை ரத்து செய்து, கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டது. இதனை முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா பினாமி பெயரில் கழிப்பறைகளை ஏலம் எடுத்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப்பின், கழிப்பறை எடுத்த ஒப்பந்ததாரர்கள் சுமார் ரூ.1 லட்சம் வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி கட்டணத்தை செலுத்தவில்லை.  இதனால், மாநகராட்சி அதிகாரிகள் 2 கழிப்பறைகளை பூட்டி விட்டனர். மீதியுள்ள ஒரு கழிப்பறையும் பொது பயன்பாட்டிற்கு, பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது.  இதனால் மார்க்கெட் வியாபாரிகள் கழிப்பறைகளை திறப்பது குறித்து மாநகராட்சி உதவி கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டில் உள்ள 3 கழிப்பறையில், 2 கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது. ஒன்று மட்டும் திறந்துள்ளது. அதில், கதவு இல்லை. ஒரு சில கழிப்பறைகளில் தாழ்ப்பாள் இல்லை. தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் மார்க்கெட்டில், ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. அதுவும் போதுமான அடிப்படை வசதியில்லாமல் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி உதவி கமிஷனரிடம் கோரிக்கை வைத்தோம். முன்னாள் ஒப்பந்ததாரர் கட்டணத் தொகை பாக்கி வைத்துள்ளார். அதனால் பூட்டி உள்ளோம். மேலும் அனைத்து கழிப்பறையும் ஏலம் விடப்படும். அதில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கலந்து கொள்ளலாம் என கூறிவிட்டனர். தற்போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுங்கள். இல்லையென்றால், நாங்களே கழிப்பறைகளை எடுத்து சுத்தம் செய்து, பயன்டுத்த அனுமதி கொடுங்கள். அல்லது தினந்தோறும் நடமாடும் கழிப்பறை வாகனங்களை மார்க்கெட்டில் நிறுத்த வேண்டும் என கோரியுள்ளோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை பதில் கூறவில்லை’ என்றனர்….

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்