அதிமுக ஆட்சியின் இறுதி காலத்தில் நடந்த பயிர் கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு: தணிக்கை பணி தீவிரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 23ம் தேதி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘2021ம் ஆண்டு அதிமுக அரசு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 17428.73 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பல பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில பேருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக தள்ளுபடி கடன் சான்றிதழை வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,” 31.1.2021ல் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.12,100 கோடி அளவுக்கு அந்த தள்ளுபடியை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மட்டுமல்லாமல், அனைத்து வங்கிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், நிறைய புகார்கள் வந்துள்ளது. இதில், 136 சங்கங்களில் கிட்டதட்ட ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ 108 கோடி அளவிற்கும், அதேபோல 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் அங்கே முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக, ரூ.12 ஆயிரம் கோடியில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல ஈரோட்டில்  ரூ.1,085 கோடி. இப்படி 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி என்றால், இரண்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.2,400 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எல்லா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நகைகளும், அங்கே இருக்கக்கூடிய கடன் வழங்கிய முறையும் பரிசீலித்து பின்பு அதற்கு உரிய ரசீதுகள் வழங்க வேண்டும் என்று துறைக்கு ஆணையிட்டுள்ளோம். அந்த பரிசோதனை முடிய முடிய அனைத்து விவசாயிகளுக்கும் ரசீது வழங்கப்படும்” என்றார். இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தகம் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி-2021 தொடர்பாக, அயல் மாவட்ட அலுவலர்களை கொண்ட குழு அமைத்து, மொத்த பயனாளிகள் பட்டியலில் உள்ள பயனாளிகளை கடன் ஆவணங்கள் மற்றும் சங்கத்தின் பதிவேடுகள், பேரேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தி 100 சதவீதம் கடன்களை வருகிற 15ம் தேதிக்குள் உரிய முறையில் சரிபார்க்க வேண்டும்.ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி-2021க்கான பயனாளிகள் பட்டியலை அயல் மண்டல அலுவலர்களை குழு 100 சதவீதம் மறு கூராய்வு மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளப்படும் சரகத்தின் துணைப்பதிவாளரிடம் உடன் சமர்ப்பிக்க வேண்டும். துணை பதிவாளர்கள் சரகவாரியாக தமது சரகங்களில் உள்ள சங்கங்களில் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 5 சதவீதம் கடன்களையும், மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர்கள் 5 சதவீதம் கடன்களையும் மேலாய்வு செய்திடவும், பின், கடன்களை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மேலாய்வு செய்ய வேண்டும்.அதன்படி, சரக துணை பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் மேலாய்வு செய்தபின் எந்த சங்கத்தில் மறு கூராய்வு முடிவுற்றுள்ளதோ, அந்த சங்கத்தின் தள்ளுபடி பட்டியலை விரைந்து தணிக்கை மேற்கொள்ள ஏதுவாக தொடர்புடைய சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநருக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். முழு விசாரணை நடத்தி, ஆய்வு செய்யப்பட்ட மொத்த கடன்களின் விவரம், முறைகேடாக வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம், மேலாய்வு செய்யப்பட்ட கடன்களின் விவரம், தணிக்கை உதவி இயக்குநருக்கு அனுப்பிய கடன்களின் விவர அறிக்கையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரின் அனுமதியுடன், மண்டல இணைப்பதிவாளர்கள் வருகிற 31ம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த அதிமுக ஆட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர்கள் 5% கடன்களையும் மேலாய்வு செய்திடவும், பின், கடன்களை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மேலாய்வு செய்ய வேண்டும்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு