அதிமுக ஆட்சியால் மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள் பயணிக்கும் பாதைகளை தூர்வார கோரிக்கை

சின்னாளபட்டி: ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள நீர்நிலைகளுக்கான நீர்வழிப்பாதைகள் புதர்மண்டியும், ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளன. இதனால், தொடர்மழை பெய்தும் குளங்கள் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து குளங்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீராதாரங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சின்னாளபட்டியிலிருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோயில் எதிரே உள்ளது கரியன்குளம். சுமார் 14 ஏக்கர் நீர் பாசனம் பரப்பளவுள்ள இந்த குளத்திற்கு வரும் நீர்வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால், பருவமழை மற்றும் கனமழை பெய்தும் இந்த குளம் நிரம்பாமல் உள்ளது.இதேபோல நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட திருமயகவுண்டன்பட்டி குளம் மற்றும் கேத்தயகவுண்டன் குளம் வறண்டு கிடக்கிறது. இந்த குளங்களுக்கு வரும் நீர்வரத்து பாதைகளை பலர் ஆக்கிரமித்திருப்பதாலும், முறையாக தூர்வாராததாலும் குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போய்விட்டது. மேலும், குளம் முழுவதும் கருவேலம் மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து குளங்களை முறையாக தூர்வாரி மழைநீரை தேக்க செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. எங்கு பார்த்தாலும் கருவேலம் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.அதுபோல் நீர்நிலைகளுக்கு வரும் நீர்வழிப்பாதைகள் முழுவதும் புதர்மண்டியும், ஆக்கிரமிப்புக்குள்ளாகியும் உள்ளது. இதனால், இப்பகுதியில் போதிய மழை பெய்தாலும், குளம், ஏரி, கண்மாய்கள் நிரம்பால் வறண்டு காணப்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை தூர்வார வேண்டும், என்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி