அதிமுக ஆட்சியால் ஒருநாள் மழைக்கே இப்படி… தொடர் மழை என்றால்? வடிகால் வசதி அமைக்க பழநி மக்கள் வலியுறுத்தல்

பழநி: பழநி பகுதியில் பெய்த திடீர் மழையால் சாலைகள் குளங்களாக மாறி விட்டது. எனவே, சாலைகளில் மழைநீர் வழிந்தோட போதிய வடிகால் வசதி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் லேசான மழை பெய்தது. பழநி நகரில் பெய்த மழையின் அளவு 17 மில்லிமீட்டராக பதிவாகி இருந்தது. பழநி நகரில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 58 கோடியில் சாலை மேம்பாட்டு பணி நடந்தது. பணிகள் தரமாக நடைபெறவில்லையென பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் சாலைகளில் மழைநீர் வழிந்தோட போதிய வடிகால் வசதி செய்யப்படாததால் லேசான மழைக்கே பழநி நகரில் உள்ள வையாபுரி குளம் பைபாஸ் சாலை, ரயில்வே பீடர் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றன. வாகனங்களில் நீரை பீய்ச்சியபடி சென்றதால் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, மேற்கண்ட பணிகளை ஆய்வு செய்து தவறு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பணிகள் எல்லாமே மக்கள் நலனுக்காக இன்றி, அமைச்சர்கள், அதிகாரிகளின் நலனுக்காகவே நடந்துள்ளது. அதனால், பழநி நகரில் நடந்த சாலை மேம்பாட்டு பணிகள் முறையாக நடக்காமல், சிறிய மழைக்கே மழைநீர் சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் படும்பாடு பெருபாடாகாகி விடுகிறது. எனவே, இந்த பணிகளின் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.* தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர்நத்தம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள துணைவீதிகளில் முக்கிய வீதிகள் போன்று அடிக்கடி சாலைகள் போடப்படுவதில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தாழ்வான பகுதிகளில் நிரம்பி விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து 7வது வார்டு கீழமாத்தூர் சாமியார் தெருவைச் சேர்ந்த அலாவுதீன் கூறுகையில், சிறுமழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து போக போதிய வாறுகால் வசதி இன்றி தேங்கி விடுகிறது. அவற்றை அப்புறப்படுத்துவதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே, தாழ்வான தெருவை மற்ற வீதிகளின் அளவிற்கு உயர்த்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அங்குள்ள கழிவுநீர்கள் வாய்க்கால் மூலம் நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை