அதிமுக ஆட்சிக் காலத்துல தொடங்கப்பட்ட டோல்கேட்டுக்கு எதிராக மாஜி மந்திரி திடீர் போராட்டம் நடத்தியதன் பின்னணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சியின் முதல் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்து முதல் டிவிஸ்ட் கொடுத்த சேலம்காரர், வேறு வகையில் காய் நகர்த்தி நாற்காலியை பிடிக்க முயற்சிக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின்  பொதுக்குழுவில் தேனிகாரரை துரத்தி அடித்தும் சேலம்காரரின் கோபம் இன்னும் குறையவில்லையாம். பொதுக்குழு  புஷ்வாணமாகி போனதால் டென்ஷனில் இருக்கிறாராம். இனி நாம எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இடிபோலவும் இருக்கனும். 11ம் ேததி பொதுக்குழு முடியும் வரை சில விஷயங்கள் எந்த வகையிலும் ‘லீக்’ ஆகக் கூடாது என்று சொல்லியிருக்கிறாராம். மேலும் நம்ம கூடாரத்துல போட்ட ரகசிய திட்டங்கள் எல்லாம் யார் மூலம் போனது என்பதை கண்டுபிடித்தவுடன், அவர்களின் பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தேனி பக்கம் சாய்ந்துவிட்டாராம். எனவே, இரண்டாவது பொதுக்குழுவை  11ம்தேதி கண்டிப்பாக கூடும்.  இதற்காக  2,432 பேருக்கு இலை தரப்பில் அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்களாம். அதுல, சேலம்காரர், மேலாளர் உள்பட யாருடைய கையெழுத்தும் இல்லையாம். அப்புறம், இந்த  பொதுக்குழுவுல 16 தீர்மானங்கள் குறித்துதான் மட்டுமே பேசப்போறாங்களாம். நியூமராலஜிபடி 7ம் எண் ராசி என்பதால், இந்த 16 தீர்மானங்கள் நிச்சயம் நிறைவேறும்னு சேலம்காரர் நம்பறார். இதுல முக்கியமான விஷயமே இலை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சேலம்காரரை தேர்வு செஞ்சே  ஆகணுங்கிறதுதான். அதன் பிறகு, இலைக்கட்சி  தொண்டர்களை முழுமையாக தங்கள் பக்கம் இழுக்க மம்மிக்கு பாரத  ரத்னா விருது கொடுக்கணுமுன்னும் ஒரு தீர்மானம். முதல்ல வாரி மண்டபத்துக்குள்ள கூட்டம் நடந்தது. இரண்டாவது கூட்டத்துல பிரச்னை வந்து சேர், கண்ணாடிகள் உடைவதை தடுக்க… அதே மண்டபத்தின் பொது வெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு நடத்தறாங்களாம். அடிதடி நடந்தாலும் சட்டை கிழியலாம், ஷாமியான கிழியலாம், சேர் உடையலாம்… இப்படி நடந்தா கூட சேத மதிப்பு சில லட்சங்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடாம். கொரோனா காரணத்தை வைத்து பொதுக்குழுவுக்கு நடத்த சிக்கல் வந்தால் அதை சமாளிக்கவும், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வீடியோ  கான்பரன்சிங் மூலமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளார்களாம். எதுக்கும் தயாரா இருக்கணுமுன்னு  சொல்லியிருக்காம் தலைமையிடம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கிரிவல மாவட்டக்காரர், தேனியை பழி வாங்கிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறாரமே ஏன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலையின் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபிறகு, சேலம்-தேனி அணிகள் தனித்தனியாக மோதிக்ெகாள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்த சர்ச்சைக்கு அச்சாரம் போட்டது கிரிவல மாஜி அமைச்சர் விவசாயம் மீது தேனி தரப்பினர் கொதிப்பில் இருக்காங்க. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த சேலம்காரரை வரவேற்று, பொதுச்செயலாளரே, ஒற்றைத்தலைமையே என போஸ்டர் அடித்த விவசாயம், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளையும் அணி திரட்டி சேலம்காரர் முன்பு நிறுத்தி, வட மாவட்டங்களில் தேனிக்கு ஆதரவு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டாராம். அதோடு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இலை கட்சி அலுவலக பேனரில், தேனிகாரர் போட்டோவை நீக்கியிருப்பதும், போஸ்டர், நோட்டீஸ்களில் இனிமேல் அவரின் பெயர், போட்டோ போடக்கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் விவசாயத்தை தன் பெயரில் முன்னதாக கொண்ட அந்த மாஜி மந்திரி உத்தரவிட்டுள்ளாராம். காரணம் என்ன என்று விசாரித்தால், முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கி, தன் மந்திரி பதவியை பறித்து கைது வரை கொண்டு சென்றதற்கு பின்னணியில் தேனி தரப்பினர் இருந்ததாக ‘விவசாயத்துக்கு’ நீண்டகாலமாக கோபம் இருக்கிறதாம். அதற்கு பழி தீர்க்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தவர், இப்போது சேலம்காரருடன் கைகோர்த்துள்ளாராம்… ஒவ்வொருவரும் ஒரு காரணத்துக்காக சேலம்காரருக்கு சப்போர்ட் பண்றாங்க. இதுல விவசாயம் வேறு வகை…’’என்றார் விக்கியானந்தா.  ‘‘இலை இரட்டையர்களிடம் ‘டபுள் கேம்’ ஆடும் இலை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சின்ன மாவட்டத்தில் இலை கட்சியில் இருந்த நிர்வாகிகள் 21 பேர் சமீபத்தில் சேலம்காரரின் அணிக்கு தாவினர். முக்கிய நிர்வாகிகள் தாவலால் இப்போதைக்கு தேனிகாரருக்கு ஒரேயொரு மாஜி எம்எல்ஏ மட்டுமே ஆதரவாம். இதனால் சின்ன மாவட்டத்தில் சேலத்துக்காரரின் கை தான் ஓங்கியுள்ளதாம். சமீபத்தில் சின்ன மாவட்டத்தில் நடந்த இலைகட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் சேலத்துக்காரர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தேனிக்காரரின் ஆதரவு மாஜி எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்களாம். முக்கியமாக, இருதரப்பினரும் ஒன்றாக நின்று சிரிச்ச முகத்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததை நேரில் பார்த்த இலை கட்சி தொண்டர்கள் குழப்பத்துல மூழ்கிட்டாங்களாம். தேனிக்காரர் அணியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ சேலத்துக்காரர் பக்கம் தாவ நினைக்கிறாரா அல்லது ேசலத்துக்காரர் அணியினர் தேனிக்காரர் பக்கம் வர உள்ளார்களா என ஒன்றுமே புரியல என மண்டபத்தில் இருந்த தொண்டர்களுக்குள்ளே பேசிக்கிட்டாங்க. எது எப்படியே சின்ன மாவட்டத்தை பொறுத்தவரை இரு தரப்பு அணியினர் இரட்டை தலைமையிடம் டபுள் கேம் ஆடுறாங்க என திருமண நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘மதுரையில முன்னாள் அமைச்சர் உதயகுமார், டோல்கேட்டை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி கைதாகியிருக்காரே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஆனால் இந்த டோல்கேட் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாம். கடந்த 10 ஆண்டுகளா சும்மா இருந்திட்டு இப்போ திடீரென்று ஏன் போராட்டம் நடத்தினார்னு கட்சிக்காரங்களுக்கே ஒரே குழப்பமாம். கடைசியிலதான் தெரிஞ்சது, அவரது தொகுதியிலும், மாவட்டத்திலும் தேனிக்காரரின் ஆட்கள் இவருக்கு எதிராக போராட்டம் நடத்துறாங்களாம். குறிப்பா தான் சார்ந்துள்ள சமூக தொண்டர்கள் கடுமையாக இவரை எதிர்க்கிறாங்களாம். இதனால அதை திசை திருப்பத்தான் இந்த போராட்டத்தை நடத்துறாராம்’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

உறுப்பினர்களை சேர்க்க முடியாத விரக்தியில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் தாமரை விஐபிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா