அதிமுக அலுவலகத்தை சூறையாடி விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து சொத்து பத்திரம் உட்பட 113 ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் மீட்பு: இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில தாக்கல் செய்ய தீவிரம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கடுமையாக மோதிக் கொண்டனர். மேலும், அதிமுக அலுவலக கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வேனில் எடுத்து சென்றனர்.அதிமுக அலுவலக மோதல் மற்றும் சொத்து ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் விசாரணை நடத்தினர். அப்போது சி.வி.சண்மூகம், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து எடுத்து சென்ற சொத்துப்பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கலவரத்தின்போது எடுத்து செல்லப்பட்ட சொத்து பத்திரம் உள்பட 113 ஆவணங்கள் என அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சொத்துப்பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் உண்மையானதா என்பது குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் படி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பொருட்கள் எடுத்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட 60 பேர் மீது திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாளில் ஓபிஎஸ் உட்பட வழக்கில் தொடர்புடைய 60 பேரிடம் எடுத்து செல்லப்பட்ட சொத்துப்பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுக அலுவலக கலவரம் வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் சிபிசிஐடி போலீசார் அனைத்து வழக்குகளும் விரைந்து விசாரணை நடத்தி அதற்கான இறுதி அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை