அதிமுக அலுவலகத்தில் போலீசார் மீண்டும் ஆய்வு: இன்ஸ்பெக்டர் தலைமையில் நடந்தது

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, அலுவலக மேலாளர் மகாலிங்கம் அளித்த தகவலின் படி, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நேற்று மீண்டும் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த ஜூன் 11ம் தேதி தேர்வானார். அதே நாளில் ஓபிஎஸ் தன் ஆட்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்று கூட்டம் நடத்தியும், மூடியிருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அவரது ஆட்கள் உள்ளே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், ஆவணங்கள், பொருட்களை வேனில் எடுத்துச் சென்றனர். இந்த மோதல் தொடர்பான வழக்கு ராயப்பேட்டை போலீசில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி கடந்த 7ம் தேதி விசாரணை அதிகாரி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் செல்வின் சாந்தகுமார். லதா, ரம்யா, ரேணுகா ஆகியோர் கொண்ட குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து நேரடியாக வீடியோ பதிவுகளுடன் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து சிபிசிஐடி அளித்த சம்மன் படி நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள், அலுவலக சொத்து பத்திரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது.அலுவலக மேலாளர் மகாலிங்கம் அளித்த விளக்கத்தை தொடர்ந்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் உதவி ஆய்வாளர், காவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2.50 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, உடைக்கப்பட்ட கதவுகள், பீரோக்கள், கபோடுகள், சேர்கள் போன்றவை ஆய்வு செய்தனர். மேலும், மகாலிங்கம் அளித்த தகவலின் படி வீடியோ பதிவுகளுடன் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் இரவு வரை ஆய்வு செய்து அதை அறிக்கையாக பதிவு செய்து கொண்டனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி