அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்ட திட்டம் திருவாடானை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை:  திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை தொகுதி தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம்,  காவல்துணை கண்காணிப்பு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு கலைக் கல்லூரி என அனைத்து வகையான அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமை வாய்ந்த ஊராகவும் பாண்டிய ஸ்தலம் 14ல் ஒன்றாக விளங்கும் ஆதிரத்தினேஸ்வரர் சமேத சிநேக வள்ளி அம்மன் கோயில் இங்கே அமைந்துள்ளது.  இப்படி பல்வேறு பெயரும் புகழும் கொண்ட திருவாடானை இன்னும் ஊராட்சியாகவே உள்ளது. திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த அதிமுக அரசு திருவாடானை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் அறிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நின்றுவிட்டது. எனவே திருவாடானை வளர்ச்சி பெற வேண்டுமானால் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பேரூராட்சியாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊர்களும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் திருவாடானை ஊராட்சியாக இருப்பதால் ஊராட்சிக்கு வரும் சொற்ப நிதியை வைத்தே வளர்ச்சி பணியை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுகா தலைமையிடமாகவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பதிவு துறை அலுவலகம், வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்கள், ஓரளவு நடுத்தரமான தொழிலகங்கள் எல்லாம் அமைய பெற்றுள்ளன. இதனால் வளர்ச்சிகள் கூடிக் கொண்டே செல்கிறது. ஆனால் திருவாடானையை பொருத்தமட்டில் இவ்வளவும் இருந்தும் ஊராட்சியாக இருந்து வருவதால் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. திருவாடானை ஊராட்சி என்பது தேரோடும் நான்கு வீதிகளும் பண்ணை வயல் என்ற சிறிய கிராமமும் அடங்கிய பகுதியாகும். ஆனால் நிலப்பரப்பில் திருவாடானையை ஒட்டிய கல்லூர் ஊராட்சி இணைந்தே உள்ளது. கல்லூர் ஊராட்சியோடு    இணைத்து திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த முடியும்.  இந்த இரண்டு ஊராட்சிகளும் அடுத்தடுத்து வீடுகள் இணைந்து ஒரே ஊராகவே விளங்குகிறது. அரசு ஆவணங்களில் தான் கல்லூர் தனி ஊராட்சியாக உள்ளது. இந்த இரண்டு ஊராட்சிகளையும் இணைத்தால் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான மக்கள் தொகையும் வருமானமும் கிடைத்துவிடும். எனவே திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருவாடானை பொதுமக்கள் கூறுகையில், தொகுதியின் தலைமை இடமாக இருந்து இன்னும் ஊராட்சியாகவே இருப்பது தமிழகத்தில் ஒரு சில ஊர்கள் தான். அதில் திருவாடானையும் ஒன்றாக உள்ளது.  திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.  கடந்த அதிமுக அரசு பேரூராட்சியாக பல ஊராட்சிகளை தரம் உயர்த்தியது. ஆனால் திருவாடானை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துவிட்டு தரம் உயர்த்திய பட்டியலில் இடம் பெறவில்லை.  இதனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், மழை நீர் வடிகால், உயர்தர சாலைகள் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெறும். அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.  இதனால் ஊர் வளர்ச்சி அடையும். எனவே திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கையை துரிதமாக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்