அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்ததால் பெண் ஊழியரை நீக்க நெருக்கடி மாஜி அமைச்சர் மீது புகார்

ஈரோடு: அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்ததால் ஆத்திரம் அடைந்து, ஊராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்க கோரி முன்னாள் அமைச்சர் அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அட்டவணைப்புதூர் ஊராட்சியில் பணி தள பொறுப்பாளராக இருக்கும் ஜானகி (49) என்பவர், நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். எனது கணவர் மாற்றுத்திறனாளி. எனக்கு ஒரு மகள் உள்ளார். என் வருமானத்தை நம்பித்தான் குடும்பம் உள்ளது. நான் அதிமுகவில் இருந்து விலகி கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன். இதனால், என் மீது கோபம் அடைந்த முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன் என்னை பணிதள பொறுப்பாளர் பணியிலிருந்து நீக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அரசியல் ரீதியாக என்னை பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். எனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனது வேலை பாதுகாப்பினையும், குடும்பத்திற்கான பாதுகாப்பும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு