அதிக பஸ்களை இயக்க கோரி கிளாம்பாக்கத்தில் பயணிகள் மறியல்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக பஸ்களை இயக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. சென்னை, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார இறுதியையொட்டி நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். அப்போது பேருந்துகள் சரிவர வராததால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு ஒரு மணி முதல் நேற்று அதிகாலை வரை ஜிஎஸ்டி சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 8 மணிக்குமேல் சரிவர பேருந்துகள் வருவதில்லை. மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்தும் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. தினமும் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது என பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளை போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் அனைத்து பேருந்துகளையும் அங்கு வர வைத்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்