அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 166 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை: ₹10.52 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு

வலங்கைமான், ஜூலை 5: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.52 லட்சம் மதிப்பீட்டில் தொழுவூர் ஊராட்சியில் 166 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த திமுக ஆட்சியில் 2006- 2011 ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் மக்கள்தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சுழற்சிமுறையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பழைய குளங்கள் தூர்வாரப்பட்டு படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும் இவற்றில்மிகவும் முக்கியமானதாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை முடக்கியது.

இந்நிலையில் தற்போது தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில், குக் கிராமங்கள் அதிகமாக உள்ள மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகைதிடல் உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரகுநாதபுரம் ஆகிய 8 கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22ம் நிதியாண்டில் பணிகள் மேற் கொள்ளபட்டது. மேலும் 2022, 23ம் நிதிஆண்டில் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலாழ்வாஞ்சேரி வேலங்குடி வீராணம் தென்குவளவேலி, வடக்குபட்டம், மருவத்தூர், புளியக்குடி, ஆலங்குடி ஊத்துக்காடு, நார்த்தாங்குடி மூனியூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல 2023, 24ம் நிதியாண்டில் சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, கீழ விடையல், கொட்டையூர் மதகரம், மணக்கால், பாடகச்சேரி, பெருங்குடி, சித்தன்வாலூர், தொழுவூர், விளத்தூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளிலும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது . இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம் ஊராட்சிகளில் 30 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நடப்பு நிதியாண்டில் (24- 25) ஆதிச்சமங்கலம், ஆவூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வலங்கைமான் அடுத்த தொழுவூர் ஊராட்சியில் குடியான தெரு பகுதியில் ₹10.52 லட்சம் மதிப்பீட்டில் 166 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25- 26 நிதியாண்டில் ரெகுநாதபுரம் விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை