அண்ணா – கலைஞர் அறிவாலயம் கொள்கையும் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட லட்சிய மாளிகை

சென்னை: திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கியதிலிருந்து பல்வேறு வரலாற்று சுவடுகளில் தடம் பதித்துள்ள நிலையில் புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கு தயாராகி உள்ளது தி.மு.க. தேசிய அரசியலில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே திராவிட கட்சிகளின் மிகப்பெரிய எண்ணமாக இருக்கும். அதற்கு சான்றாக திராவிட முன்னேற்ற கழகத்தின் டெல்லி கட்சி அலுவலகத்தை நேற்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்ததன் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 2013ம் ஆண்டு இடம் பெற்றிருந்த திமுகவிற்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசால் இடம் ஒதுக்கப்பட்டது.அறிவாலயம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட லட்சிய மாளிகை என்ற கலைஞரின் வாக்கியத்திற்கு ஏற்ப சென்னையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தை போன்ற தோற்றத்தில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது கட்சி அலுவலகம். பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைமையகங்களும் பல்வேறு நீதிமன்ற வளாகங்களும் அமைந்திருக்கக் கூடிய தீனதயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கம்பீரமாய் கட்டி எழுப்பப்பட்டுள்ளது அண்ணா-கலைஞர் அறிவாலயம்.சுமார் 11000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இடதுபுறத்தில் மார்பளவு அண்ணா சிலையும், வலதுபுறத்தில் மார்பளவு கலைஞர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. உள்ளே சென்றவுடன் முரசொலி மாறன் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ள அரங்கத்தில் கலைஞர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்களும், கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படத்தொகுப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள் பயன்படுத்துவதற்கு அதிநவீன லிப்ட் வசதி உள்ளது. அதன் மூலம் முதல் தளத்திற்கு சென்றால் அங்கு கட்சி அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்களும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கு கூட்ட அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறை முழுவதும் வண்ணமயமான விளக்குகளும், ஓவியங்களும் உள்ளன. இரண்டாம் தளம் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த கட்சி வேலைகளையும் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் தனித்தனி தொலைபேசி வசதி, கணினி வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளம் என்பது பாதுகாக்கப்பட்ட இடமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக பிரத்தியேக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியல் உட்பட பல வரலாற்று புத்தகங்களை அடங்கிய நூலகமும் இதில் அமைந்துள்ளது.மொத்தமாக டெல்லி திமுக கட்சி அலுவலகம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடிய வகையில் பல்வேறு நுணுக்கங்களுடன்  கட்டப்பட்டுள்ளது. டெல்லியில் காலநிலை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் என்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக கட்டுமான பணியை மேற்கொண்ட கட்டிட பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்