அண்ணாமலையார் கோயில் பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி தீவிரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி

திருவண்ணாமலை, அக்.13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, பஞ்ச ரதங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி, தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 26ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து, திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்ச ரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி, விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர் எனப்படும் மகா ரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது. மேலும், அண்ணாமலையார் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. எனவே, மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இப்பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்துறையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில், சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடப்பதால், அங்கு 24 மணி நேரமும் இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீசார் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத்திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு