அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு கலெக்டர் தொடங்கி வைத்தார் கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு

திருவண்ணாமலை, அக்.21: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றுவதற்காக பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, நெய் காணிக்ைக சிறப்பு பிரிவை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைெபறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, 26ம் தேதி மகாதீபப்பெருவிழா நடைபெற உள்ளது.
அதையொட்டி, அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, அண்ணாமலையார் கோயிலில் நேற்று முதல் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ நெய் ₹80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் எதிரில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதனை, கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து, பக்தர்களிடம் இருந்து நெய் காணிக்கையை பெற்றுக்கொண்டார். அப்போது, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை