அண்ணன் தலைமீது கல்லை போட்டு கொன்ற தம்பி கைது கண்ணமங்கலம் அருகே பரபரப்பு சொத்து தகராறில் பயங்கரம்

 

கண்ணமங்கலம், மே 28: கண்ணமங்கலம் அருகே சொத்து தகராறு ஏற்பட்டதால் அண்ணன் தலை மீது கல்லை போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சின்னபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(60) விவசாயி. இவருக்கு பாஸ்கரன் என்கிற விஜயகுமார்(39), ஐயப்பன் என்கிற சேட்டு(35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலிதொழிலாளிகள். இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவதாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, தம்பி ஐயப்பனை அடித்து விட்டு அண்ணன் பாஸ்கரன் ஓடினாராம். பின்னால் துரத்தி வந்த ஐயப்பன் பாஸ்கரன் தலைமீது கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தலையில் கல்லை போட்டு அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு