அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகையில் தண்ணீர் திறக்கப்படும்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவுக்கு, அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத போதும், தொடர்ந்து 5 மாதங்களாக முழு கொள்ளளவில் இருக்கிறது. தற்போது வைகை அணையில் 69 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது. சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் திருவிழாவின்போது, வைகை அணையில் இருப்பை பொறுத்து, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால், மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கப்படாது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. நடப்பாண்டில் மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப். 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம், தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து கண்டிப்பாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தண்ணீர் திறப்பு அளவு குறித்து, அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி வழங்கியதும் திருவிழா நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

அரசு பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடல்

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன