அணைக்கட்டு அருகே காப்புக்காடுகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா? துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை: மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே காப்புக்காடுகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு குழுவினரும், மாவட்ட வனத்துறையும் இணைந்து காப்புக்காடு பகுதிகளில் தீவிரவாதிகள், நக்சல்கள் நடமாட்டம் உள்ளதா என அவ்வப்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குவன் தலைமையில் 8 போலீசார், வேலூர் வனச்சரக வனவர் சுதாகர், வனக்காவலர் நவீன்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைக்கட்டு அருகே கைலாசகிரி, அத்தியூர், சிவநாதபுரம், புலிமேடு, கல்லாங்குளம், தார்வழி உள்ளிட்ட காப்புக்காடு மலைகளில் நேற்று முன்தினம் மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளின் நடாமட்டம் உள்ளதா, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா, நக்சலைட்டுகள் உள்ளார்களா என துப்பாக்கிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அங்கிருந்த மலைவாழ் மக்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, மலைகளில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், தீவிரவாத அமைப்புகள் யாராவது தென்பட்டாலும், அவர்களால் ஏதாவது பாதிப்புகள் வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து சோதனை குழுவினர் கூறுகையில், ‘மலைகளில் தீவிரவாதிகள் மற்றும் நக்சல் நடமாட்டத்தை கண்காணிக்க இதுபோல் ஆய்வு செய்வது வழக்கம். இந்த மலை பகுதியில் எந்த நடமாட்டமும் தென்படவில்லை. இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் நடக்கிறது. யாராவது பிடிபட்டால் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்களின் பயத்தை போக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது’ என்றனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்